கொரோனா ஊரடங்கு - திருச்சி காவிரிப் பாலத்தில் உணவுக்காகக் காத்துக்கிடக்கும் மக்கள்!

திருச்சி காவிரிப் பாலம், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பசியாற்றும் பாலமாக மாறியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உணவுக்காகத் திண்டாடும் சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் திருச்சி காவிரிப் பாலத்தின் இரு மருங்கிலும், பசியோடு மக்கள் இடைவெளி விட்டு அமர்ந்துகிடக்கிறார்கள். உணவுக்காக இவர்கள் தவிப்பது பார்ப்பவர்களைக் கண்கலங்கவைக்கிறது.

நாம் அங்கிருந்தவர்களிடம் பேசினோம். ``வழக்கமான நாள்களில் அன்னதானத் திட்டத்தின்கீழ் உணவு கிடைக்கும். தற்போது, கோயில்கள் மூடப்பட்டதால் அதற்கு வழியில்லாமல் போச்சு. நாங்கள் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் அமர்ந்து இருந்தோம். உணவு வழங்குபவர்கள், அவ்வளவு தூரம் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். இந்நிலையில், பசியால் வாடுபவர்களுக்குத் திருச்சி காவிரிப் பாலத்தில் வைத்து திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக, கலெக்டர் சிவராசு இரவு நேரங்களில் அவரே நேரடியாக உணவு வழங்கி வந்தார்.
அது அப்படியே பரவலாக எல்லோருக்கும் தெரியவரவே, இங்கு வந்தால் உணவு கிடைக்கும் என்பதால் பலரும் இங்கு வந்து காத்துக்கிடக்கிறார்கள்” என்று கூறினார்.

இங்கு தனிமனித இடைவெளியுடன் உட்கார்ந்து இருக்கும் நபர்களுக்குத் தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.
வழிப்போக்கருக்கு உணவு வழங்கிய போலீஸார்!
இதேபோல், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீஸார் பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள கோனேரிப்பாளையம் பைபாஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே மிகுந்த களைப்புடன் ஒருவர் நடந்து வருவதை போலீஸார் பார்த்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல்லிலிருந்து நடந்து வந்துள்ளார். தொடர்ந்து நடந்து வருவதால் உடல் சோர்வாக இருப்பதாகவும் பசியாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

அதனையடுத்து இன்ஸ்பெக்டர் கலா தங்கள் சாப்பிட வைத்திருந்த உணவை அந்த நபருக்குக் கொடுத்து சாப்பிட வைத்ததுடன், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, அந்த நபரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பாட்டுக்காக கையேந்தி நிற்பதுதான் வேதனை.