Published:Updated:

``ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்; காட்டுப்பகுதியான கோட்டைமேடு!" - சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை

கோட்டைமேடு கிராமம்
News
கோட்டைமேடு கிராமம்

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர், உப்புநீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டு கிராமம், வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது.

``ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்; காட்டுப்பகுதியான கோட்டைமேடு!" - சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர், உப்புநீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டு கிராமம், வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது.

Published:Updated:
கோட்டைமேடு கிராமம்
News
கோட்டைமேடு கிராமம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு  வங்கக் கடலில் பழையாறு துறைமுகத்தையொட்டி கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதியருகே திட்டுப் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு திட்டுப் பகுதிதான் கோட்டைமேடு கிராமம். இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழில். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டு கிராமம் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது. இங்குள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் விவசாயம் செய்துவந்த இந்தக் கிராம மக்கள், விவசாயத்துக்கு மிகவும் அடிப்படைத் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தை காலி செய்துவிட்டு வெளியே வந்து குடியேறிவிட்டனர்

கோட்டைமேடு கிராமம்
கோட்டைமேடு கிராமம்

அதனால், 2004-ம் ஆண்டிலிருந்து கோட்டைமேடு கிராமம் வெறிச்சோடிக் கிடக்கிறது. அங்கு வாழ்ந்தவர்களின் வீடுகள் இன்றும் இடிந்த நிலையில் அடையாளமாக இருக்கின்றன. கோயிலும், அங்குள்ள தொடக்கப் பள்ளியும் இன்றும் அழகு மாறாமல் இருந்துவருகின்றன.

கோட்டைமேடு கிராமத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை. அங்கு மக்கள் வாழ்ந்த அடிச்சுவடாக பள்ளிக் கட்டடம், குடியிருப்புகள், மின்கம்பங்கள், ஊர் பொதுக் குளங்கள் இருக்கின்றன. மேலும் அந்தப் பகுதியில் நினைவுச்சின்னமாக பழைமையான கோட்டை சிதைந்து, அதன் அடையாளமாக அடிச்சுவர் இருந்துவருகிறது. இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் அலையாத்திக் காடுகள் சூழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் படகு மூலம் வந்து சுற்றிப் பார்த்துச் செல்கின்றனர்.

இது குறித்து கோட்டைமேடு கிராமத்தில் வசித்தவர்களிடம் பேசினோம். ``நாங்கள் ஆண்டாண்டுக் காலமாக கோட்டைமேடு கிராமத்தில் வசித்துவந்தோம். எங்க ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் படகு மூலமாகத்தான் பயணித்தாக வேண்டும். கொள்ளிடம், சீர்காழி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவிவந்தது. இதனால் எங்களுக்குப் போக்குவரத்து பெரும் சிரமமாக இருந்தது. ஒரு அவசர சிகிச்சைக்குக்கூட அவதிப்படும் நிலை இருந்தது. நாங்கள் அதிகமாக சிதம்பரம், பிச்சாவரம் ஆகிய பகுதிகள் வழியாகத்தான் செல்வோம். இந்த நிலையில், அரசு சார்பில் எங்கள் கிராமத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், சுனாமிக்குப் பிறகு எங்கள் பகுதியில் குடிநீர் இல்லை. எனவே, வேறு வழியின்றி அந்தக்  கிராமத்தைவிட்டு நாங்கள் கொள்ளிடம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் குடியேறிவிட்டோம்.

கோட்டைமேடு கிராமம்
கோட்டைமேடு கிராமம்

மேலும் நாங்கள் வாழ்ந்த கிராமத்தில் வழிபாட்டுத்தலமான  முனீஸ்வரன் கோயில் இருக்கிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் கிராமத்தில் வசித்த நாங்களெல்லாம் ஒன்றுகூடி முனீஸ்வரனுக்குப் படையல் போட்டு எங்கள் உறவு முறைகளைச் சந்திப்போம். இந்த முனீஸ்வரன் கோயில் எங்கள் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சோழ குறுநில மன்னர் கட்டியதாகச் செவிவழிச் சேதி. பெரும் கோட்டை கட்டி இங்கு மன்னர் வாழ்ந்து வந்ததாகவும், அந்தக் கோட்டையை பீரங்கி மூலம் அந்நியர்கள் தகர்த்தனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தக் கிராமம் அலையாத்திக் காடுகள் மூலம் சூழப்பட்டிருப்பதால், மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். தற்போது இந்தக் கிராமம் பெரிய காட்டுப் பகுதியாக அமைந்திருக்கிறது. மக்களே வசிக்காத இந்தக் காட்டு கிராமத்தைச் சிலர் கண்டு களிப்பதற்காக வந்து செல்கின்றனர். எனவே, இந்தக் கிராமத்தைச் சுற்றுலாத்தலமாக அறிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றனர்.