Published:Updated:

`ஆடம்பரம் இல்ல; அசராத வேகம்!' - மா.சுப்பிரமணியனின் ஊட்டி ட்ரிப்பைக் கொண்டாடும் மக்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``அமைச்சரா பொறுப்பேற்றதுக்கு அப்புறம் இவர் போற 20-வது மாவட்டம் இது. வந்த வேலைய பெர்ஃபெக்ட்டா முடிச்சிட்டு அடுத்த மாவட்டத்துக்குக் கெளம்பிட்டார்."

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு எந்த அமர்க்களமும் இல்லாமல் வந்திறங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியனை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டச் செயலாளர் முபாரக் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். அந்த வரவேற்பு நிகழ்வையே கொரோனா தடுப்பு ஆலோசனைக்கூட்டமாக மாற்றிய அமைச்சர், மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்த கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். மறுநாள் தான் பங்கேற்வேண்டிய நிகழ்ச்சிகளின் பயண நேரத்தின் விவரப்பட்டியலை வாங்கிக்கொண்டு ஓய்வுக்குச் சென்றார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன்

திட்டமிட்டபடியே காலை 8.30 மணிக்குக் கிளம்பி ஊட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் ஸீரோ டிலே வார்டு, ஹெல்ப் டெஸ்க் , புதிய ஆக்ஸிஜன் பிளான்ட் ஆகியவற்றை ஆய்வு செய்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கமளித்தார். அதைத் தொடர்ந்து ஃபிங்கர் போஸ்ட் பகுதியில் இரண்டு இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். உடனடியாக அங்கிருந்து கிளம்பி, முதுமலையில் உள்ள செம்மநத்தம் பழங்குடியினர் கிராமத்துக்குச் சென்று, பழங்குடி மக்களுக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார். அந்தப் பகுதிக்கான நடமாடும் ரேஷன் கடையையும் தொடங்கி வைத்தார்.

முதுமலை தெப்பக்காட்டில் டீ பிரேக்கை முடித்த அமைச்சர், கூடலூர் முதல் மைல் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு அங்குள்ள தன்னார்வலர்களையும் சந்தித்துப் பேசி ஊக்கமளித்தார்.

அடுத்ததாக செம்பாலா பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கி வைத்துவிட்டு ஊட்டிக்குத் திரும்பியவர், மதிய உணவை உண்டார். தமிழகம் மாளிகையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தவர், தமிழகத்தில் கொரோனா மற்றும் கறுப்புப் பூஞ்சை பாதிப்புகளை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு, குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தைப் பார்வையிடக் கிளம்பினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பணிகளுக்கு பாஸ்டியர் ஆய்வகத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற தகவல்களை அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பழங்குடிகள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளிடம் நம்பிக்கை தெரிவித்துவிட்டு மாலையே கோவைக்குக் கிளம்பிவிட்டார்.

எந்தவித ஆடம்பரம், அமர்க்களம் என எதுவும் இல்லாமல், திட்டமிட்ட பணிகளைத் திட்டமிட்ட நேரத்தில் சளைக்காமல் முடித்த அமைச்சரை அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் பேசிவரும் நிலையில், இந்தப் பணிகளுக்கு இடையேயும் உடற்பயிற்சி, ஓட்டம் என ஃபிட்னஸுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்ததைக் கண்டு அனைவரும் வியந்து வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நிகழ்ச்சி ஏற்பாட்டில் பங்கேற்ற அரசு அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``வழக்கமா அமைச்சர் நிகழ்ச்சின்னா சொன்ன டைம்க்கு நடக்காது. ஆனா, மனுஷன் தீயா பறக்குறார் சார். நைட் 12 மணிக்கு படுத்தாலும் காலையில நேரமாவே ரெடியாகிடுவார். எப்போ சாப்புடுவார், எப்போ தூங்குவார்னு தெரியல. ஊட்டி குளிர்ல டீ ஷர்ட்டோட ரன்னிங், கிரவுண்ட்ல எக்சர்ஸைஸ்னு பின்றாப்ல. சொன்ன டைமுக்கு டான்னு வந்து நின்னாப்ல. இவர் பின்னாடி ஓடுன அதிகாரிங்க பாதி பேருக்கு சாப்பிடக்கூட நேரமில்ல. அமைச்சரா பொறுப்பேத்ததுக்கு அப்புறம் இவர் போற 20-வது மாவட்டம் இது. வந்த வேலைய பெர்ஃபெக்ட்டா முடிச்சிட்டு அடுத்த மாவட்டத்துக்குக் கெளம்பிட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு