Published:Updated:

` இது 13-வது முறை!' - சாலையில் திடீரென ஏற்படும் குழிகளால் கலங்கும் மயிலாடுதுறை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2009-ம் ஆண்டு ரூ.42 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே இத்திட்டத்தில் ஏகப்பட்ட ஊழல் நடப்பதாகப் புகார் எழுந்தது.

சாலையில் விழுந்த குழி
சாலையில் விழுந்த குழி

மயிலாடுதுறை நகரில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடை குழாய் 13-வது முறையாக உடைந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

road
road

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2009-ம் ஆண்டு ரூ.42 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதலே இத்திட்டத்தில் ஏகப்பட்ட ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வோம் என்றும், சுத்திகரிக்கப்படும் நீரில் புல் வளர்க்கப்படும் என்றும் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்காக ஆறுபாதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுநீரைக் கொண்டுசெல்ல 8 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை கழிவுநீர் சுத்திகரிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகரில் உள்ள 36 வார்டுகளிலும் ஆங்காங்கே திடீர் திடீரென சாலையில் பள்ளம் ஏற்படுவதும் குழாய்கள் உடைந்து கழிவுநீர் கசிந்து நகரில் நாற்றம் எடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு உண்டாகி பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கொத்தத் தெரு, தரங்கம்பாடி சாலை என பல இடங்களில் சாக்கடைக் குழாய்கள் உடைந்து, பள்ளம் ஏற்படுவதும் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் இதை அவ்வப்போது சரிசெய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று 13-வது முறையாக மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் கண்ணாரத்தெரு பகுதியில் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டதால் காவல்துறையினர் மாற்றுவழியில் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

damage road
damage road

``மயிலாடுதுறை பாதாளச் சாக்கடைத் திட்டமானது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கழிவுநீர் செல்லும் குழாய்கள் அனைத்திலும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்துவிட்டன. சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குளங்களில் ஒன்று மண்ணால் தூர்ந்து போயிருக்கிறது. எனவே, முக்கிய சாலைகளில் உள்ள பாதாளச் சாக்கடைக் குழாய்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிய பைப்லைன் போட்டால்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நகராட்சி நிர்வாகம் மனதுவைத்தால்தான் இது சாத்தியம்" என்கின்றனர் பொதுமக்கள்.