Published:Updated:

சுய ஊரடங்கு... களையிழந்த கல்யாண நிகழ்ச்சிகள். ராமேஸ்வரத்தில் சூடுபிடித்த கள்ள மது விற்பனை!

வெறிச்சோடிய ராமேஸ்வரம் கோயில் வீதி
வெறிச்சோடிய ராமேஸ்வரம் கோயில் வீதி ( உ.பாண்டி )

ராமநாதசுவாமி திருக்கோயில், நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றன.

ஊரடங்கைத் தொடர்ந்து, புனிதத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரம் தீவு, மக்கள் நடமாட்டம் - போக்குவரத்து இன்றி தனிமைத் தீவாகத் துண்டிக்கப்பட்டது. பயணத்தை ரத்துசெய்ய முடியாத நிலையில் ராமேஸ்வரம் வந்த 50-க்கும் குறைவான யாத்ரீகர்கள், கோயில் நடை அடைப்பால் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.

ராமேஸ்வரம் பேரூந்து நிலையம்
ராமேஸ்வரம் பேரூந்து நிலையம்
உ.பாண்டி

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபட, நாட்டு மக்கள் அனைவரும் இன்று ஒரு நாள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடப்பட்டது.

அதன்படி, இன்று காலை முதலே மக்கள் நடமாட்டம் ஏதுமின்றி நாடு முழுவதும் வெறிச்சோடிய நிலையில், புனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரம் தீவு, மக்கள் நடமாட்டம் இன்றியும், போக்குவரத்து இன்றியும் தனிமைட் தீவாக மாறிப்போனது. ராமேஸ்வரத்தில் பிரதான இடங்களான பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அக்னி தீர்த்த கடற்கரை, அப்துல் கலாம் நினைவிடம் என அனைத்துப் பகுதிகளும் ஆட்கள் யாரும் இன்றி வெறிச்சோடிக்கிடக்கின்றன.

நீராட ஆட்கள் இன்றி கிடக்கும் அக்னிதீர்த்தம்.
நீராட ஆட்கள் இன்றி கிடக்கும் அக்னிதீர்த்தம்.
உ.பாண்டி

நேற்று முன் தினம் காலை முதல், இங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலும் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் 6 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பயணத்தின் படி வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் குறைவான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமலும், வெளியிடங்களுக்குச் செல்லமுடியாமலும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், படகுகள் அனைத்தும் கரையிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அப்துல்கலாம் நினைவிடம்
அப்துல்கலாம் நினைவிடம்
உ.பாண்டி

இன்றைய தினம் நடைபெறும் திருமணம் மற்றும் காதணி விழா போன்றவற்றிலும் ஆரவாரம் ஏதுமில்லை. அதிகாலையில் ஆங்காங்கே திறந்திருந்த சிறு டீ கடைகள்கூட காலை 7 மணிக்குப் பின் அடைக்கப்பட்டன. அதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு இடங்களில் கறி விற்பனை மட்டும் களை கட்டியிருந்தது. அங்கு சென்ற அரசு அலுவலர்கள், கடைகளை விரைவாக மூடும்படி கேட்டுக்கொண்டனர். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்ட நிலையில் நடைபாதை வாசிகளுக்கும், மனநோயாளிகளுக்கும் யாத்திரைப் பணியாளர் காளிமுத்து, இலவசமாக உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள்
ராமேஸ்வரம் துறைமுகத்தில் படகுகள்
உ.பாண்டி

மக்கள் ஊரடங்கின் காரணமாக, இன்று அரசு மதுபானக் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, ராமேஸ்வரம் தீவில் பாம்பன் பகுதியில் மட்டுமே மதுபானக் கடைகள் உள்ளன. அங்கிருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிவரும் சிலர், ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம், துறைமுக வீதி, வேர்கோடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே தங்கள் விற்பனையைத் தொடங்கியிருந்தனர். இதனால் குடிமகன்கள் அவற்றை வாங்குவதற்காக ஊரடங்கையும் பொறுப்படுத்தாமல் வெளியில் நடமாடினர். அதைக் கண்ட போலீஸார், கள்ளத்தனமாக சரக்கு விற்றவர்களை விரட்டியடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு