Published:Updated:

`இது பெட்ரோலா இல்ல ஜூஸா? - வாகனங்கள் பழுதானதால் கொந்தளித்த பொதுமக்கள்

பழுதடைந்த வாகனங்களிலிருந்து பெட்ரோலை பாட்டில்களில் பிடித்துப் பார்த்தனர். அந்த பெட்ரோல் ஜூஸ் போன்று வெவ்வேறு நிறங்களில் காட்சியளித்தது.

பெட்ரோல் பங்க் முற்றுகை
பெட்ரோல் பங்க் முற்றுகை

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவக் கல்லூரிக்கு எதிரில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. 50 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்த பெட்ரோல் பங்கில், இன்று காலை பெட்ரோல் போட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாகனங்கள் திடீரெனப் பழுதாகின.

ஜூஸ் போன்ற பெட்ரோல்
ஜூஸ் போன்ற பெட்ரோல்

பெட்ரோல் போட்டு சிறிது தூரம் சென்றதும், அனைத்து வாகனங்களும் ரிப்பேர் ஆனதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், ஆத்திரத்தில் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர். பெட்ரோலில் ஏதோ கலந்துள்ளதாகக் கூறி, பெட்ரோல் போடும் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், பழுதடைந்த வாகனங்களிலிருந்து பெட்ரோலை பாட்டில்களில் பிடித்துப் பார்த்தனர். அந்த பெட்ரோல், ஜூஸ் போன்று வெவ்வேறு நிறங்களில் காட்சியளித்தது. பெட்ரோலுக்குப் பதில் ஜூஸ் வினியோகிக்கிறீர்களா எனக் கேட்டு வாகன ஓட்டிகள் ஆவேசமானார்கள்.

பெட்ரோல் பங்கில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதை அறிந்த அதன் உரிமையாளர் பிரின்ஸ், அங்கு வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெட்ரோல் பங்கு உரிமையாளர் பிரின்ஸ் கூறுகையில், "சமீபகாலமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலில் பத்து சதவிகிதம் எத்தனால் கலக்கிறார்கள். எத்தனால் கலந்த பெட்ரோலை லாரிகளில் கொண்டு வந்து மழைக்காலங்களில் பங்குகளில் நிரப்பும்போது, அதில் லேசாகத் தண்ணீர் புகுந்தாலும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.

பிரச்னைக்குரிய பெட்ரோல் பங்க்
பிரச்னைக்குரிய பெட்ரோல் பங்க்

எனவேதான் மழைக்காலங்களில் பெட்ரோல் வரவழைப்பது இல்லை. இந்த முறை டேங்கில் இருந்த பெட்ரோலில் எப்படியோ தண்ணீர் கலந்திருக்கலாம். இன்று, இந்த பங்கிலிருந்து பெட்ரோல் நிரப்பியதால் பாதிப்பு ஏற்பட்ட அத்தனை வாகனங்களையும் சீரமைப்பதற்கான தொகையை நாங்கள் வழங்குகிறோம்" என்றார். இதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.