Published:Updated:

``குழந்தைகளுக்குப் பழைய சாப்பாடுகூட கொடுக்க முடியாம தவிக்கிறோம்!”-கவலையில் இருளர் மக்கள்

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

`வீட்டு வேலைக்குப் போற இடத்துல மிச்சமீதியாகும் சாப்பாட்டை, எங்களுக்குக் கொடுப்பாங்க. அதைக் கொண்டுவந்து குழந்தைகளுக்குக் கொடுப்போம். ஆனா, இப்போ கொரோனா முடியிற வரைக்கும் வீட்டு வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.'

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து, அன்றாட உணவுக்கு ஏராளமான மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். அவர்களுக்குத் தன்னார்வலர்கள் சிலர் உதவிவந்த நிலையில், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி அவர்களையும் நேரடியாக உதவிகள் செய்யக் கூடாது எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகிலுள்ள விட்டலபுரம் கிராமத்திலுள்ள 25 இருளர் குடும்பங்கள் ரேஷன் பொருள்கள் உட்பட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அங்கு வசிக்கும் விஜயாவிடம் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசினோம்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

``எங்க சமூகத்துல ஆம்பளைங்க விவசாய வேலைக்கும், பொம்பளைங்க வீட்டு வேலைக்கும் போவோம். இப்போ யாருக்குமே வேலையில்லை. காலங்காலமா நாங்க ரேஷன் அரிசியைத்தான் சாப்பிடுறோம். வீட்டு வேலைக்குப் போற இடத்துல மிச்சமீதியாகும் சாப்பாட்டை எங்களுக்குக் கொடுப்பாங்க. அதைக் கொண்டுவந்து குழந்தைகளுக்குக் கொடுப்போம். ஆனா, இப்போ கொரோனா முடியிற வரைக்கும் வீட்டு வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.

இங்க நிறைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்லை. அதனால முன்னாடியெல்லாம் கிலோ மூணு ரூபாய்க்கு ஊருக்குள்ள ரேஷன் அரிசியை வாங்கிச் சோறாக்குவோம். இப்போ தட்டுப்பாடு இருக்கிறதால அஞ்சு ரூபாய்க்கு ரேஷன் அரிசியைச் சிலர் விக்கிறாங்க. அதுக்கே தட்டுப்பாடா இருக்கு. சில குடும்பத்துக்குக் கிடைச்ச ரேஷன் அரிசியை ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரிச்சுப் பயன்படுத்தறோம்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

வேலைக்குப் போனாதான் ஏதாச்சும் காய்கறியாவது வாங்கி கொழம்பு வெப்போம். இப்போ அதுகூட வழியில்லை. இருக்கிறதை வெச்சு ஏதோ அரகொறையா சோறாக்கிச் சாப்பிடுறோம். `ரேஷன் கார்டாவது கிடைக்க ஏற்பாடு செய்ங்க’ன்னு பலமுறை கேட்டாச்சு. எந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க உதவி செய்யலை.

ஆனா, வீட்டு வரி கட்டலைன்னா அதிகாரிங்க சத்தம் போடுவாங்க. அதைத் தவறாம கட்டுறோம். இப்போ சாப்பாட்டுக்குச் சிரமப்படுற எங்களைக் கண்டுக்க யாருமே வர்றதில்லை.

பக்கத்துல இருக்கிற ரேஷன் கடைக்குப் போய் எங்களுக்கும் ரேஷன் பொருள்கள் கொடுங்கன்னு கேட்டோம். `கார்டு இருந்தாதான் கொடுப்போம்’னு சொல்லிட்டாங்க. எங்க நிலைமையைத் தெரிஞ்சுகிட்டு ஒருசிலர் வந்து ரேஷன் அரிசி கொடுத்து ஒத்தாசை பண்ணாங்க. இப்போ கவர்மென்ட் அதையும் கொடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனால, ஒருத்தர்கூட எங்களுக்கு உதவி செய்ய வர்றதில்லை” என்று ஆதங்கத்துடன் கூறினார் விஜயா.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

இந்த மக்களின் நிலை குறித்துச் செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் விநியோக அதிகாரி ஜெயதீபனிடம் பேசினோம். ``ரேஷன் கார்டு உள்ள மக்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாத மக்கள் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தால் அவர்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை இலவசமாகக் கொடுக்கிறோம். விட்டலபுரம் இருளர் குடியிருப்பு மக்களின் நிலை குறித்து எனக்குத் தகவல் வரவில்லை. தற்போது திருக்கழுங்குன்றம் தாலுகா தாசில்தார் மற்றும் விட்டலபுரம் கிராம வி.ஏ.ஓ ஆகியோரிடம் உடனடியாக நான் பேசி, அந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்கிறேன். மேலும், ரேஷன் கார்டு இல்லாமல் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்படும் மக்கள் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரைத் தொடர்புகொண்டால் உடனே உதவி செய்யப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு