Published:Updated:

`சோழர் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது!'- சுவர் ஓவியங்களால் நெகிழும் தஞ்சை மக்கள் #Video

சோழர்கால நாயகர்கள்
சோழர்கால நாயகர்கள்

ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது வரையப்பட்ட ஓவியங்களை பாதுகாக்க அப்போதைய ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் சிறப்புக் கவனம் செலுத்தினார்.

மாமன்னன் ராஜராஜ சோழன், வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன், குந்தவை நாச்சியார் என சோழர் காலத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன இங்குள்ள ஓவியங்கள். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரியகோயில் செல்லும் வழியெங்கும் தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறார்கள் இந்தச் சரித்திர நாயகர்கள். தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் வரைந்துள்ள அழகிய ஓவியங்கள் பொதுமக்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. குடமுழுக்கிற்குப் பிறகும் இந்த ஓவியங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என நெகிழ்ச்சியோடு கோரிக்கை வைக்கிறார்கள் தஞ்சை மக்கள்.

ஓவியங்கள்
ஓவியங்கள்

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. தஞ்சாவூர் என்று சொன்னாலே கலை, இலக்கியம், வேளாண்மை ஆகியவைகள்தான் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நினைவுக்கு வரும். கலையின் மீதான தாக்கத்தினாலும், சிவ பக்தியினாலும்தான் மாமன்னன் ராஜராஜ சோழன், உலகமே வியக்கக்கூடிய கலைப்பொக்கிஷமாக தஞ்சை பெரியகோயிலைக் கட்டி எழுப்பினார். இதனால்தான் இக்கோயிலில் ஆன்மிகமும் கலைநயமும் சேர்ந்து மிளிர்கிறது.

அந்தக் கலை தாகம், தொன்றுத்தொட்டு தொடர்கிறது. 2010-ம் ஆண்டு தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெற்றபோது, அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகத்தின் ஏற்பாட்டில், கும்பகோணம் ஓவியக்கல்லூரி மாணவர்கள், தஞ்சை நகர சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள். பெரியகோயில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது, அதை மாமன்னன் ராஜராஜசோழன் பார்வையிடுவது போன்ற ஒவியங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. ஓவியக்கல்லூரி மாணவர்களின் அர்ப்பணிப்புக்கும், கலைநுணுக்கத்துக்கும் மதிப்பளிக்கும் விதமாக, ஆயிரமாவது ஆண்டு விழா முடிந்த பிறகும் அந்த ஓவியங்களைப் பாதுகாக்க, அப்போதைய மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சண்முகம் சிறப்பு கவனம் செலுத்தினார். அந்தச் சுவர்களில் போஸ்டர்கள் ஓட்டக் கூடாது, விளம்பர வாசகங்கள் எழுதக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்தார். அதனால் அந்த அழகிய ஓவியங்கள் நீண்டகாலம் பாதுகாக்கப்பட்டது. தஞ்சைக்கு வரக்கூடிய வெளியூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அந்த ஓவியங்களை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தார்கள். அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பின் காரணமாகவே தற்போது, பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஓவியங்களைப் படைக்க தஞ்சை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியம்
தஞ்சாவூர் நகர சுவர்களில் அழகிய ஓவியம்

தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை, பொன்னியின் செல்வன் நாவலை காட்சிப்படுத்தக்கூடிய ஓவியங்கள், சிவ தாண்டவம் உட்பட 170-க்கும் அதிகமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் தற்போதை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மிகுந்த ஈடுபாடு காட்டியுள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசும் தஞ்சை மக்கள், ``குடமுழுக்கிற்குப் பிறகும் இந்த ஓவியங்கள் நிலைத்திருக்க வேண்டும். இதில் போஸ்டர் ஒட்டவோ, விளம்பரங்கள் செய்யவோ தடை விதிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் அமைத்து, மாவட்ட நிர்வாகம் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்த ஓவியங்களைச் சேதப்படுத்த முடியாத வகையில், அதேசமயம் பார்வையார்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தலா ஒரு அடி கம்பி வலைகள் அமைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைக்கிறார்கள்.

பெரியகோயில் குடமுழுக்கு'- தஞ்சையை அழகாக்கும் `பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்! விவரங்களுக்கு...

Posted by Vikatan EMagazine on Monday, February 3, 2020
அடுத்த கட்டுரைக்கு