Published:Updated:

பெரம்பலூர்: `என்ன பண்றதுன்னே தெரியல..!’ - சேலையை வீசி இளைஞர்களைக் காப்பாற்றிய பெண்கள்

உயிருக்குப் போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்
உயிருக்குப் போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்

``நாங்கள் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தபோது, செந்தமிழ் செல்விதான் முதலில் ஐடியா கொடுத்தது. பின்பு மூவரும் அணிந்திருந்த சேலைகளை வீசினோம். அதனைப் பிடித்துக்கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள்.’’

நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களை உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று பெண்கள், தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி காப்பாற்றியிருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. மூன்று பெண்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இளைஞர்கள்
இளைஞர்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாற்றில் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். இதில், இரு இளைஞர்கள் விளையாட்டாக ஆற்றுப் பள்ளத்தில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்த நிலையில், ஆழம் அதிகமான பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களும் அதே பள்ளத்தில் சிக்கிக் கொண்டு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் இளைஞர்களின் நிலையைக் கண்டிருக்கிறார்கள்.

உயிரிழந்த  ரஞ்சித்
உயிரிழந்த ரஞ்சித்

உடனடியாகச் செயல்பட்ட அவர்கள், ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உயிரைக் காப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போராடினர். அங்கு நடந்த வாழ்வா, சாவா போராட்டத்தின் இறுதியில் இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர். பவித்ரன், ரஞ்சித் இருவர் உயிரிழந்தனர்.

இளைஞர்களைப் போராடி மீட்ட முத்தம்மாள் என்பவரிடம் பேசினோம். ``நாங்கள் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது இந்த பசங்க குளிக்கப் போனாங்க. அந்தப் பக்கம் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று ஆழமான பகுதியில் இறங்க வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவோ எச்சரித்தும் அவர்கள் சொல்வதைக் காதில் கூட வாங்கவில்லை.

பவித்ரன்
பவித்ரன்

அந்த இளைஞர்கள் தண்ணீரில் விளையாட்டுக்காக இறங்கினார்கள். திடீரென இருவர் சிக்கிக்கொள்ள, அவர்களைக் காப்பாற்ற மற்ற இருவரும் குதித்தனர்.

உயிருக்கு போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்
உயிருக்கு போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்

தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தோம். அங்கு அந்த இளைஞர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தபோது, செந்தமிழ்ச் செல்விதான் முதலில் ஐடியா கொடுத்தது. பின்பு மூவரும் அணிந்திருந்த சேலைகளை வீசினோம். அதனைப் பிடித்துக் கொண்டு இருவர் கரையேறி வந்தார்கள். இரு இளைஞர்களை எங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அவர்களையும் காப்பாற்றியிருந்தால் கண்டிப்பாக சந்தோசப்பட்டிருப்போம். அந்த பசங்க எங்க கண்முன்னே உயிரிழந்தது நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதனால், ஒரு நாள் முழுவதும் சரியான தூக்கம் இல்லை" என்று கண் கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு