Published:Updated:

`தாயை இழந்த வேதனையை நான் அறிவேன்..!’ -தூய்மைப் பணியாளரை நெகிழ வைத்த பெரம்பலூர் எம்.எல்.ஏ

தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்துப் பாராட்டிய எம்.எல்.ஏ
தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்துப் பாராட்டிய எம்.எல்.ஏ

தாயை இழந்த மனம் எந்த அளவுக்கு வேதனைப்படும் என எனக்கு நன்கு தெரியும். அவர் மனவேதனையில் வீட்டில் அமர்ந்திருக்காமல் மக்களுக்காக வேலைக்கு வந்ததைதான் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு வீட்டில் முடங்கிக் கிடக்காமல் மக்களுக்காக தூய்மைப் பணியாளர் வேலைக்கு வந்திருக்கிறார் அய்யாத்துரை. இந்த நிலையில், அவரைப் பாராட்டும் விதமாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பெரம்பலூர் எம்.எல்.ஏ. அத்தோடு இருவரும் உருக்கமாகப் பேசிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர் அய்யாதுரை
தூய்மைப் பணியாளர் அய்யாதுரை

வி.களத்தூர் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் அய்யாத்துரையின் தாயார் அங்கம்மாள், கடந்த சில வாரமாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். இறந்த தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கையோடு, கிராம மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் அய்யாத்துரை. இவர் செய்த காரியத்தை அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர். இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடியும் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அய்யாத்துரையை அவர் வேலை செய்த இடத்துக்கே சென்ற பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வன், அவருக்குப் பொன்னாடை போர்த்தி பண உதவிகளையும் செய்திருக்கிறார். அவருடைய கஷ்டங்களைப் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர் அய்யாதுரை
தூய்மைப் பணியாளர் அய்யாதுரை

இதுகுறித்து அய்யாதுரையிடம் பேசினோம். ``அம்மாவுக்கு 78 வயசு ஆகுது. அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்தன. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர், கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த நிலையில், என் தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு கொரோனா விவகாரம் காரணமாக நான் தூய்மைப் பணி வேலைக்கு வந்துவிட்டேன். காரணம், எனக்கு ஊரோட நிலவரமும் கொரோனா நோய்த் தொற்று குறித்தும் நன்கு தெரியும். நான் இல்லையென்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நான் வேலைக்கு வந்துவிட்டேன்.

என்னைப் பாராட்டிய முதல்வருக்கு நன்றி. நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்துக்குத் தேடிவந்து என்னைப் பாராட்டி எனக்குப் பண உதவிகளையும் செய்தார் எம்.எல்.ஏ. எனக்கு பண உதவிகளைச் செய்ததைப் பெரிதாகச் சொல்லவில்லை. ஒரு எம்.எல்.ஏ நேரில் வந்து சந்தித்து ஆறுதல் சொல்வதைத்தான் பெருமையாக நினைக்கிறேன். சுயநலமாக இருக்காதீர்கள். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள்" என்று முடித்துக்கொண்டார்.

தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய எம்.எல்.ஏ
தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய எம்.எல்.ஏ

பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``தாயை இழந்த மனம் எந்த அளவுக்கு வேதனைப்படும் என எனக்கு நன்கு தெரியும். அவர் மனவேதனையில் வீட்டில் அமர்ந்திருக்காமல் மக்களுக்காக வேலைக்கு வந்ததை தான் நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவருடைய நலனைப் பெரிதும் யோசிக்காமல் மக்கள் நலனுக்காக வீதிக்கு வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நபரை அழைத்து மரியாதை செலுத்துவதைவிட அவர் இடத்துக்கே சென்று மரியாதை செலுத்துவதைப் பெரிதாக நினைத்தேன். அதனால் அவரைத்தேடிச் சென்றேன். அவரது குடும்பச் சூழல்கள் குறித்துப் பேசினார். ரொம்ப வருத்தமாக இருந்தது. அவருடைய மனக் கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த நேரத்தில் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்திருப்பேன்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன்
பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன்

ஆனால் தவறாகி விடும். அதனால் என்னுடைய நம்பரைக் கொடுத்து வந்துள்ளேன். என்ன தேவைகள் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். அவருக்கு உதவிகள் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன். இது போன்ற மனிதர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இவரைப்போன்று எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக கொரோனாவின் பிடியிலிருந்து அகலாம்" என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு