Published:Updated:

`சுகாதார நிலையம் மூடல்; 3 கிராமங்களுக்கு சீல்!'- கொரோனா பாதிப்பால் பெரம்பலூர் அதிகாரிகள் அதிரடி

பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவு
பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவு

அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நபர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதால் அந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் தற்காலிகமாக ஆரம்பச் சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. அத்தோடு மூன்று கிராமங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். 1,258 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டுவந்த ஒருவர், அவரது மைத்துனர், வீ.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன், காசி யாத்திரைக்குச் சென்ற பேரளி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், துறை மங்கலம் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர், கல்லூரி மாணவர் ஒருவர், லப்பை குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி, அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் என ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வி.களத்தூர் காவல் நிலையம்
வி.களத்தூர் காவல் நிலையம்

இதில், தப்லீக் மாநாட்டிற்குச் சென்ற நபர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நபர் துங்கபுரம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்ததால் ஆரம்பச் சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட லப்பை குடிக்காடு, அத்தியூர், மற்றும் துங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று கிராமங்களின் எல்லைப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டுத் தடுப்பு வேலிகள் போடப்பட்டு, வெளி நபர்கள் செல்லாதவாறு, அங்கிருந்து வெளியே யாரும் வராதவாறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

துங்கபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நபர் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதால் அந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் முழுவதும் மூடப்பட்டு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மூடப்பட்டதால், தற்காலிகமாக நடமாடும் வாகனத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவு
பெரம்பலூரில் ஊரடங்கு உத்தரவு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். `` லப்பை குடிக்காடு, அத்தியூர் மற்றும் துங்கபுரம் உள்ளிட்ட மூன்று கிராமங்களும் லாக்டெளனில் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் பகுதியை லாக்டெளன் செய்திருக்கிறோம். அதோடு, இந்தப் பகுதிகளை 14 நாள்கள் கண்காணிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, இப்பகுதி முழுவதும் கிருமிநாசினியைத் தெளித்து வருகிறோம். தொடர்ந்து, பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்கும் தொடர்ந்து சளி, காய்ச்சல் உள்ளதா? வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பி வந்துள்ளனரா என்பது குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதுவரையிலும் 1,100-க்கும் மேற்பட்டோர் சளி மற்றும் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு