Published:Updated:

`இங்கு ட்ரீட்மென்ட்கூடாது; தற்கொலை செய்துகொள்வோம்'-கொரோனாவால் பதறிய மக்கள்; அதிர்ந்த அதிகாரிகள்

போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்
போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

`கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கிராமத்தின் எல்லை பகுதியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்க்காமல் மையப்பகுதியில் உள்ள பள்ளியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்த்தால் என்ன அர்த்தம்?’.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை இங்கு வைத்து மருத்துவம் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் நாங்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம் என்று பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வைரஸ் பரவலின் வேகம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் திங்களன்று, 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைபார்த்த பலர் அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்துசேர்ந்தனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் லோடு ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாகக் கிராமத்துக்கு சமீபத்தில் வந்தடைந்தனர். இதன் காரணமாகப் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானோ வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்
போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

இந்த நிலையில் பசும்பலூர் கிராமத்தில் சென்னையிலிருந்து கொரனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை அங்குள்ள அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் சுகாதாரத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏற்பாடு செய்தனர்.

அதிகரிக்கும் எண்ணிக்கை... மூடப்படும் கோயம்பேடு சந்தை! சென்னையின் தேவை என்ன? #ChennaiUpdate

இதை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், `கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள பள்ளியில் வைத்து இவர்களுக்கு மருத்துவம் பார்த்தால் கிராம மக்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மாற்று இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்படிச் செய்தால் கிராம மக்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியதோடு, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலை அறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா, மங்கலமேடு டி.எஸ்.பி தேவராஜன் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையில் அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 20-க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கிராமத்தின் எல்லைப் பகுதியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்க்காமல் மையப்பகுதியில் உள்ள பள்ளியில் வைத்து ட்ரீட்மென்ட் பார்த்தால் என்ன அர்த்தம்? காற்று மூலமாகப் பரவுதாக எல்லோரும் சொல்கிறார்கள். இவர்களால் எங்களுக்கும் எங்களது பிள்ளைகளுக்கும் பாதிக்கும் அல்லவா? அதற்காகத்தான் பயந்து போய் இவர்களை இங்கு வைத்து ட்ரீட்மென்ட் பார்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். நாங்கெல்லாம் தினக்கூலிகள். ஒருவேலை சாப்பாட்டிற்கே சிரமப்படுகிறோம். இந்த நோய் வந்தால் எங்களது குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். அதற்காகத்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு