Election bannerElection banner
Published:Updated:

அக்காள் மகள் திருமணம்; பிரபலங்களுடன் செல்ஃபி! - `பறை’ இசைத்துக் கலக்கிய பேரறிவாளன்

பறையிசைக்கும் பேரறிவாளன்
பறையிசைக்கும் பேரறிவாளன்

அக்காள் மகள் திருமணத்தில், தாய் அற்புதம்மாளுடன் சேர்ந்து பறை மேளம் இசைத்து, அனைவரையும் மகிழ்ச்சியில் அதிரவைத்தார், பேரறிவாளன்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனைப் பார்க்கவும், அக்காள் அன்புமணியின் மகள் செவ்வையின் திருமணத்தில் கலந்துகொள்ளவும், 30 நாள் பரோலில் கடந்த 12-ம் தேதி வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

பேரறிவாளன்
பேரறிவாளன்

அவரை தாய் அற்புதம்மாள் தினமும் பார்த்து பார்த்துக் கவனித்துக்கொள்கிறார். இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள தேவராசு திருமண மண்டபத்தில், 23-ம் தேதி மாலை நடைபெற்ற அக்காள் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தாய்மாமன் என்ற முறையில் பேரறிவாளன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். மண்டபத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

வரவேற்பு நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர்கள் அமீர், கௌதமன் உட்பட பிரபலங்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேடை ஏறி மணமக்களை வாழ்த்திய சீமானை பேரறிவாளன் கட்டியணைத்து வரவேற்றார். 

மண மேடையில் சீமானுடன் பேரறிவாளன்
மண மேடையில் சீமானுடன் பேரறிவாளன்

சீமானும், பேரறிவாளனும் ஒரே நிற சட்டையை அணிந்திருந்தனர். அதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் மார்பில் செல்லமாக கைகளால் குத்திக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ``இது, எங்கள் குடும்ப விழா. நாங்கள் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்று சத்யராஜ் கூறினார். திருமணத்துக்கு வந்திருந்த பலரும் பேரறிவாளனிடம் நலம் விசாரித்து, செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

28 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு முதல் முறையாக இப்படியொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அளவில்லா மகிழ்ச்சியுடன் பேரறிவாளன் காணப்பட்டார். அதையடுத்து, 24-ம் தேதி காலை திருமணத்தின்போது, மேடையில் `பறை’ மேளம் இசைத்தார் பேரறிவாளன். அவருடன் தாய் அற்புதம்மாளும், பறையிசை கலைஞர்கள் சிலரும் பறையிசைத்தனர்.

தாய் அற்புதம்மாளுடன் பறையிசைக்கும் பேரறிவாளன்
தாய் அற்புதம்மாளுடன் பறையிசைக்கும் பேரறிவாளன்

பறையிசையில் கைதேர்ந்தவர்போல் அற்புதமாக வாசித்தார் பேரறிவாளன். இதனால், திருமண நிகழ்ச்சி களைகட்டியது. பேரறிவாளன் பறை மேளம் இசைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. டிசம்பர் 13-ம் தேதியுடன் பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு