Published:Updated:

`2,500 ஆண்டு பழைமை; குறியீட்டு ஓடு; சுடுமண் பானைகள்!' -இன்னொரு கீழடியாக மாறுமா பேராவூரணி?

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி

குளத்தை ஆழப்படுத்தும்விதமாக மண்ணை வெட்டி அள்ளியபோது பழைமையான கறுப்பு சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. மேலும், பல தாழிகள் உடைந்து பாதி அளவில் காணப்பட்டன.

பேராவூரணி அருகே உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளத்தை தூர்வாரும்போது 2,500 ஆண்டு பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இப்பகுதியில் முறையாக ஆய்வு செய்தால் கீழடியைப் போன்று தமிழர்களின் வரலாறு, பண்டைய நாகரிகம் உள்ளிட்ட பல பொக்கிஷங்கள் வெளியே வரும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

குளத்தில் ஆய்வு
குளத்தில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளம் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 1 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. குளத்தை ஆழப்படுத்தும்விதமாக மண்ணை வெட்டி அள்ளியபோது பழைமையான கறுப்பு சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. மேலும், பல தாழிகள் உடைந்து பாதி அளவில் காணப்பட்டன.

இதையடுத்து கிராம மக்கள், தாசில்தார் மற்றும் தொல்லியல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மேலும், துார்வரும் பணிகளை நிறுத்தியதுடன் தாழிகள் காணப்பட்ட இடங்களைச் சுற்றி கயிறுகளைக் கொண்டு வேலி அமைத்து கொடி ஒன்றையும் நட்டு வைத்தனர். அத்துடன், இதுதொடர்பாக தொல்லியல் துறை கமிஷனர் உதயசந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர்.

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி

இதையடுத்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக தொல்லியல் துறை ஆய்வு மாணவர் கார்த்திகேயன், இன்று குளத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதை அறிந்த அப்பகுதியினர் மற்றும் பேராவூரணி எம்.எல்.ஏ., கோவிந்தராசு உள்ளிட்டோர் ஆர்வமுடன் குளத்திற்கு வந்து ஆய்வுப் பணிகளைப் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறுகையில், ``இந்தக் குளத்தில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையானதாக தாழிக்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என்பது ஆய்வில் தெரிய வருகிறது. இன்னும் மிகத் துல்லியமாக ஆய்வு மேற்கொண்டால் பல தொன்மையான சிறப்புமிக்க வரலாற்றை அறியலாம். மேலும், பானைகளில் எழுத்துகள் எதுவும் இருக்கிறதா என்பதையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.

குளம்
குளம்

இதுகுறித்து தொல்லியல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகு மற்ற பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது,`` கடந்த 1996-ம் ஆண்டு, இந்தக் குளத்தின் அருகில், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதே நாங்கள், இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு இடையே அம்பலத்திடல் என்னுமிடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்லுன்னி ஆற்றங்கரை பகுதியில் கறுப்பு, சிவப்பு முதுமக்கள் தாழிகள், எலும்புகள், சிறிய பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரவி இருந்தது கண்டறியப்பட்டது.

ஆய்வு
ஆய்வு

எங்கள் பகுதியில் தொடர்ந்து முறையாக ஆய்வு நடத்தினால், தொன்மையான மரபுகள், வரலாறு, வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் நிச்சயம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது" என்றனர்.

இதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் பேசுகையில், ``குளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட சுடுமண் பானைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் சுமார் 4 பானைகள் மட்டுமே கிடைத்தாக அறிகிறோம் ஆனால், இங்கு அதைவிடப் பல மடங்கு உள்ளது. தெற்கு ஒட்டங்காடு பகுதியில் குறியீடு கொண்ட ஓடு கிடைச்சிருக்கு. இந்தப் பகுதி முழுவதையும் எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்களால் பாதுகாப்பு வளையமிட்டு பாதுகாக்கப்படுகிறது. இதை ஆய்வு செய்தால் கீழடியைவிட பழைமையான பல பொக்கிஷங்கள் கிடைக்கும். அதன் மூலம் தமிழர்களின் வரலாறு, பண்டைய நாகரிகம் என பெருமை மிக்க பல தகவல்கள் தெரிய வரும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு