Published:Updated:

`வக்கீல் டு கூடை பின்னும் தொழிலாளி!’ - லாக்டெளனால் தொழிலை மாற்றிய பேராவூரணி வழக்கறிஞர்

கூடை முடையும் வழக்கறிஞர் உத்தமகுமரன்
கூடை முடையும் வழக்கறிஞர் உத்தமகுமரன் ( ம.அரவிந்த் )

எங்கள் உறவினர்கள், `என்னப்பா கறுப்பு உடையை மாட்டிக்கிட்டு வேலைக்குப் போய்க்கிட்டு இருந்த நீ எங்களைப் போலவே நீயும் வேலை செய்ய வந்துட்ட இதுக்காய்யா இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்ச' எனக் கேட்டதுடன் உனக்கு இது வேணாய்யா என்றனர்.

நீதிமன்றத்தில் கையில் கேஸ் கட்டுகளை வைத்துக்கொண்டு வழக்குகள் நடத்தி அதில் வரும் வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்த பேராவூரணி பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட லாக்டெளன் கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றியுள்ளது. தற்போது அவர் கூடைகள் முடைந்து விற்பனை செய்து வருகிறார்.

வக்கீல் உத்தமகுமரன்
வக்கீல் உத்தமகுமரன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உத்தமகுமரன் (34), பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இவர், மனைவி மற்றும் ஒரு மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கிடையில் படித்து வழக்கறிஞராக ஆனதுடன் தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார் படிப்பறிவே அறியாத தனது இன மக்களுக்கிடையே கடும் சிரமங்களுக்கு நடுவில் பெரும் போராட்டத்தை எதிர் கொண்டு படித்து ஒரு வக்கீலாக முன்னேறியிருக்கிறார்.

வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை நடத்தி வந்ததுடன் தன் பகுதியில் வசிக்கும் தன் இனமக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதால் தனது வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. வருமானம் இல்லாமல் போனதால் கொஞ்ச நாள்களிலேயே கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.

லாக்டெளனால் கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வக்கீல்
லாக்டெளனால் கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வக்கீல்

இந்த நிலையில் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் இனத்தின் பாரம்பர்ய தொழிலான கூடை முடைதல் தொழிலை தற்போது செய்ய தொடங்கியுள்ளார். ஆற்றுப்பகுதிக்குச் சென்று அதன் ஓரங்களில் உள்ள ஈச்சங்கோரைகளை வெட்டி வருவதுடன் அதைக் கொண்டு கூடை முடைகிறார். கூடைகளைப் பின்னி தனது வீட்டில் வைத்துவிடுகிறார். கூடை தேவைப்படுவோர் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டே நாள்களை நகர்த்தி வருகிறார்.

இதுகுறித்து உத்தமகுமரனிடம் பேசினோம். ``கொரோனாவுக்காகப் பிறபிக்கப்பட்ட லாக்டெளன் பொதுவாக எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், எங்கள் இன மக்களை முழுவதுமாக முடக்கிவிட்டது. எங்க மக்களுடையே அடிப்படைத் தொழிலே கூடை பின்னுதல், ஊருக்குள் சென்று அம்மிக்கல் கொத்துவதும்தான். ஊரடங்கால் எங்களாலும் வெளியே செல்ல முடியவில்லை மீறி சென்றாலும் கொரோனா அச்சத்தால் அம்மிக்கல் கொத்த யாரும் அழைப்பதில்லை.

வழக்கறிஞர் உத்தமகுமரன்
வழக்கறிஞர் உத்தமகுமரன்

எங்க மக்கள் பின்னும் கூடைகளை ஒவ்வொரு வாரமும் சந்தையில் வைத்துதான் விற்பார்கள். அதற்கும் வழியில்லாமல் போனதால் வருமானமும் தடைபட்டது. இதனால் எங்கள் மக்கள் பசியும் பட்டினியுமாக நாள்களைக் கடத்துகிற சூல்நிலை ஏற்பட்டது. எங்களுக்கு அருகில் உள்ள பகுதிக்கு நிவாரணம் கிடைத்தாலும் எங்களுக்கு வரவில்லை. யாரை அனுகினால் நமக்கும் நிவாரணம் கிடைக்கும் என்பதைப் பற்றிய புரிதலும் இல்லை. அவ்வப்போது வீடு தேடி வந்து மக்கள் கூடை வாங்கிச் செல்வதில் கிடைக்கும் சிறிய வருமானம்தான் இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

சட்டம் படித்துவிட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணிபுரிந்து வருகிறேன். என்னாலேயே இந்த நிலமையை சமாளிக்க முடியவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத எங்க மக்கள் என்ன செய்வார்கள். தற்போது நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதும் நடைபெறாததால் எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நான் எங்க குல தொழிலான கூடை முடையும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினேன்.

கூடையுடன்
கூடையுடன்

எங்க உறவினர்கள், `என்னப்பா கறுப்பு உடையை மாட்டிக்கிட்டு வேலைக்குப் போய்கிட்டு இருந்த நீ எங்களைப் போலவே நீயும் வேலை செய்ய வந்துட்ட இதுக்காய்யா இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்ச' எனக் கேட்டதுடன் `உனக்கு இது வேணாய்யா’ என்றனர். `வேறு வழியில்லாமல்தானே இதைச் செய்கிறேன்’ என அவர்களை தேற்றிவிட்டு என் குல தொழிலை செய்து வருகிறேன். இதில் கொஞ்சமாவது காசு கிடைக்கிறது அதைக் கொண்டு சாப்பிட்டு வருகிறோம்.

`எனக்கு கொரோனா இருக்கா... இல்லையா?' -இருவேறு ஆய்வு முடிவுகளால் கலங்கும் சென்னைக் கர்ப்பிணி

என்னோட வக்கீல் பணி போக மற்ற நேரங்களில் எங்க இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக குறிஞ்சி இன எழுச்சிக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறேன் அதன் மூலம் சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வருகிறேன். நிச்சயம் நிலமை மாறும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு நான் மட்டுமல்ல, எங்க மக்களும் நன்றாக வாழ்வார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு