Published:Updated:

`என் மகனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும்!’ - ஆந்திராவில் தவித்த பேராவூரணி இளைஞர் உருக்கம் #Lockdown

விஜகுமார்
விஜகுமார்

அப்பா என என் மகன் ஓடி வந்தான். இவ்வளவு தூரம் பல கஷ்டங்களைத் தாண்டி வந்ததைவிட ஓடி வந்த என் மகனைத் தூக்க முடியாததுதான் மனதில் வலி ஏற்படுத்தியது.

கொரோனா ஊரடங்கால் ஆந்திரா மாநிலத்தில் தவித்த பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் நடந்தும்,லாரி மூலமாகவும் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளனர். துயரமான இந்த நேரத்தில் பலர் செய்த உதவியால்தான் ஊர் வந்து சேர முடிந்தது என நெகிழ்வுடன் கூறுவதுடன், வீட்டுக்கு வந்ததும் ஓடி வந்த என் மகனைத் தூக்கிக் கொஞ்ச முடியாதது வலியை ஏற்படுத்தியதாவும் தெரிவித்தார்.

பேராவூரணி இளைஞர்கள்
பேராவூரணி இளைஞர்கள்

பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36)இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், திவாகரன் என்ற மூன்றரை வயது மகனும் உள்ளனர். விஜயகுமார் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். மனைவியும் மகனும் சொந்த ஊரில் விஜகுமாரின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தன்னுடைய கூல்டிரிங்ஸ் கடையைத் திறக்கமுடியாமல் போக வருமானத்தை இழந்ததுடன், போக்குவரத்து முடங்கியதால் சொந்த ஊருக்கும் வர முடியாமல் தவித்திருக்கிறார் விஜயகுமார். இதே போல் விஜயகுமாருடன் பேராவூரணி அருகே உள்ள சித்தாததிக்காடு பகுதியைச் சேர்ந்தவரான அவரது நண்பரும், விஜயகுமார் கடையில் வேலை பார்த்த ஒருவர் என மொத்தம் மூன்று பேரும் சாப்பிடக்கூட வழியில்லாமல் இருந்துள்ளனர்.

லாரிக்கு அருகில்
லாரிக்கு அருகில்

கையில் இருந்த பொருள்கள் மற்றும் காசைக்கொண்டு ஏப்ரல் 14 வரை எப்படியே தாக்குப் பிடித்து விட்டனர். அதன் பின்னர் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களை நிலைய குலைய வைத்துவிட்டது. விஜய குமாருக்கு ஊரில் உள்ள தன் மூன்றரை வயது மகனின் நினைப்பு வேறு துளைத் தெடுத்திருக்கிறது. இதற்கிடையில் விஜயவாடா போலீஸாரிடம் போய் ஊருக்குச் செல்வதற்கு உதவி செய்யுங்க எனக் கேட்டதற்கு எப்படியாவது ஊருக்குப் போய்ச் சேருங்க எனக் கூறிவிட்டனர்.

வேறு வழியில்லாததால் கையில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு பொடி நடையாக நடந்தே ஊருக்குச் சென்று விட வேண்டும் என மூன்று பேரும் தமிழகம் நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர். நடந்தும், லாரி மூலமும் பல சிரமங்களுக்கு இடையே சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துள்ளனர். அஹமத் என்ற லாரி டிரைவர் நாங்க ஊருக்கு வந்து சேர்வதற்குப் பெரிய உதவி செய்தார் அவர். இல்லையென்றால் நாங்க இன்னும் நடந்து கொண்டுதான் இருந்திருப்போம் என நெகிழ்ச்சியோடு கூறி வருகின்றனர்.

சமையல் செய்த போது
சமையல் செய்த போது

இது குறித்து விஜயகுமாரிடம் பேசினோம், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிய நிலையில் ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்கியிருந்த அறையிலேயே அடைபட்டுக் கிடந்தோம். இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது எங்களைப் பெரும் துயரம் கொள்ள வைத்தது. ஒரு பக்கம் வீட்டில் உள்ளவர்கள் எப்படி இருக்காங்களோ என்ற கவலை கண் கலங்க வைத்தது. என்ன நடந்தாலும் சரி நம் தாய்மடியான சொந்த ஊருக்குச் சென்று விடுவோம் என ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

பத்துக் கிலோ மீட்டர் சென்ற பிறகு லாரி ஒன்று வர எங்களுக்கு அந்த லாரி தெய்வமாகத் தெரிந்ததுடன் அதை மறிக்க லாரி டிரைவர் நிறுத்தி எங்களை ஏற்றிக்கொண்டு எங்க போறீங்க என அந்த டிரைவரான அஹமத் கேட்டார். தஞ்சாவூர் போறோம் என்றதற்கு அவ்வளோ தூரம் போறீங்களா இப்ப இருக்கிற சூழ்நிலையில் முடியுமா எனக் கேட்டுவிட்டு என்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறியதுடன் நிற்காமல் பல உதவிகளைச் செய்தார். வழியில் நிறுத்தி எங்களுக்கும் சேர்த்து சமைத்துச் சாப்பிட வைத்தார்.

`முழு ஊரடங்கு; 3 நாள்களுக்கு முன்னரே அறிவிப்பு!’- கொரோனா பரவலைத் தடுக்க தஞ்சை அதிகாரியின் அதிரடி

ஒரு வழியாக உளுந்தூர்பேட்டை வந்து சேர்ந்தோம். பின்னர் அஹமத் திருச்சி வரை செல்லக்கூடிய மற்றொரு லாரி டிரைவரிம் பேசி எங்களை ஏற்றிவிட்டார். ஒரு வழியாக திருச்சி வந்துவிட்ட பிறகு வாகனங்கள் எதுவும் வராததால் நடக்கத் தொடங்கினோம். சுமார் 15 கிலோ மீட்டர் நடந்திருப்போம் கால்கள் வலிக்கத் தொடங்கியது. ஆனாலும் என் மகன் முகத்தை நினைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் வந்த டெம்போ வேன் டிரைவர் தானாக நிறுத்தி எங்களை ஏற்றிக் கொண்டார். துயரங்களுக்கு மத்தியிலும் பலர் உதவி செய்தது நெகிழ்வைத் தந்ததுடன்,இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு அவரவர் வீட்டிற்கு வந்து சேரவும் முடிந்தது.

அப்பா என என் மகன் ஓடி வந்தான் இவ்வளவு தூரம் பல கஷ்டங்களைத் தாண்டி வந்ததைவிட ஓடி வந்த என் மகனைத் தூக்க முடியாததுதான் மனதில் வலி ஏற்படுத்தியது. அவனிடம் அப்பாவுக்கும் கொரோனா இருக்கு வரதாப்பா எனச் சொல்லும் போது வாடிய அவன் முகத்தைப் பார்க்கவே உடலில் சக்தியில்லை. விடிந்ததும் நம்மால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதால் முதல் வேலையாக அரசு மருத்துவமனைக்குச் சென்று விவரத்தைக் கூறி சோதனை செய்து கொண்டதுடன் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம்.

கொரோனா வைரஸை முதலில் அடையாளம் கண்ட ஷீ செங்லீ... சீனத்து சாகசப்பெண்ணின் சுவாரஸ்ய கதை!

புள்ளையைத் தூக்காமல் இருந்தா அவனுக்கு ஏக்கமாகி விடும் என்பதுடன் அவர்களுடைய பாதுகாப்பு முக்கியம் என்பதால் மனைவியையும் மகனையும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என் பொற்றோருடன் நான் இருக்கிறேன். எல்லாம் சீக்கிரமே சரியாகணும். என் மகனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என மனசு தவிக்குது. அந்த நாளுக்காகக் காத்துக் கிடக்கிறேன் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு