Published:Updated:

`மூவாயிரம் ரூபாய் போதும்; ஆழ்துளைக் கிணறுகளுக்குப் புதுவாழ்வு!' - அசத்தும் பேராவூரணி இளைஞர்கள்

மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற, ஒரு ஆழ்துளைக் கிணறுக்கு அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் செலவாகும். முதல்கட்டமா தஞ்சை மாவட்டத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றித் தரப்போறோம்.

மழைநீர் சேகரிப்பு  மையத்துக்கான வரைப்படம்
மழைநீர் சேகரிப்பு மையத்துக்கான வரைப்படம்

பள்ளிக்கூடம் அருகே பயனற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணறு ஒன்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக மூடப்படாமல் இருந்தது. சிறுவன் சுஜித்துக்கு நேர்ந்த சோகத்தின் எதிரொலியாக இப்பகுதி இளைஞர்களின் முயற்சி இந்த ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது. தற்போது இதை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

கார்த்திகேயன் - கைஃபா
கார்த்திகேயன் - கைஃபா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் அமைந்துள்ளது ஆதனூர். இங்கு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகில் பேராவூரணி பேரூராட்சிக்குச் சொந்தமான பயனற்ற ஆழ்துளைக் கிணறு, முறையாக மூடப்படாமல் இருந்தது. இது பள்ளிக்கூட சிறுவர்கள் நடமாடும் பகுதி என்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் ஏதேனும் அசாம்பாவிதம் நிகழக்கூடிய நிலை இருந்துள்ளது.

இந்நிலையில்தான் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், ஆதனூர் என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இதுகுறித்து பதற்றத்தோடு பகிர்ந்துள்ளார்கள். இது பட்டுக்கோட்டை உதவி ஆட்சியரின் கவனத்துக்குச் சென்றுள்ளது. உடனடியாக இந்த ஆழ்துளைக் கிணற்றை வருவாய்த்துறையினர் மூடியுள்ளார்கள். இதற்கிடையே பேராவூரணியில் செயல்பட்டு வரும் கைஃபா அமைப்பினர், ``பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றித் தரத் தயாராக இருக்கிறோம். உங்கள் பகுதியில் இதுபோல் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்” என சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் அருகே மூடப்பட்ட போர்வெல்
பள்ளிக்கூடம் அருகே மூடப்பட்ட போர்வெல்

உடனடியாக இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கைஃபா அமைப்பின் பொருளாளர் கார்த்திக்கிடம் பேசினோம். ‘’இந்தப் பகுதியில உள்ள நாலு தாலுகாக்களில் இருந்து மட்டுமே இதுவரைக்கும் 26 அழைப்புகள் வந்திருக்கு. திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்கள்ல இருந்தும் கூப்பிட்டு இருக்காங்க. முதல்கட்டமா தஞ்சை மாவட்டத்துல உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மட்டும் மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றித் தரப்போறோம். ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் 3 அடி ஆழம், 3 அடி அகலத்துக்கு குழி எடுத்து, சிமென்ட் உறைகளை அமைச்சி, கருங்கல் ஜல்லி போட்டு, பில்டர் அமைச்சி இதை உருவாக்கப்போறோம். ஒரு ஆழ்துளைக் கிணறுக்கு அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய்தான் செலவாகும்” என்றார்.