Published:Updated:

பெரியகுளம்: `60 அடி, இப்போ 20 அடியாகிருச்சு; தூர்வார விட மாட்டோம்!’ - கொதிக்கும் விவசாயிகள்

ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி
ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி

கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பொதுப்பணித்துறை தூர்வாரும் பணியைத் தொடங்கியிருப்பதாகப் பெரியகுளம் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

செடியிலேயே பழுத்து வீணாகும் பச்சைமிளகாய்! - வேதனையில் பெரியகுளம் விவசாயிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் உபரி நீரானது, பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய் மற்றும் பாப்பிபட்டிக் கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களுக்குச் செல்லும். 60 அடி அகலம் கொண்ட ராஜவாய்க்கால் தண்ணீர் கொண்டு செல்ல பிரதானமாகப் பயன்பட்டுவருகிறது. காலப்போக்கில், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய ராஜவாய்கால் 20 அடியாக சுருங்கியது.

அளவில் சுருங்கிய ராஜவாய்க்கால்
அளவில் சுருங்கிய ராஜவாய்க்கால்

இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் 9 கிலோமீட்டர் தூரம் கொண்ட ராஜவாய்க்காலை தூர்வார ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டன. இதனை அறிந்த பெரியகுளம் தென்கரை விவசாய சங்கத்தினர், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தூர்வாரக்கூடாது எனக் கூறி, பணியினை நிறுத்தினர்.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய பெரியகுளம் தென்கரை விவசாய சங்க செயலாளர் ராஜசேகரன், ``ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பில் இருப்பது அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் கால்வாய் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு சுருங்கிவிட்டது. இதேநிலை நீடித்தால் மூன்று கண்மாய்களுக்கும் முறையாகத் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகும்.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் தூர்வாருவதில் எந்தப் பலனும் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை கால்வாயை தூர்வார விட மாட்டோம்” என்றார் திட்டவட்டமாக.

இது தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு