Published:Updated:

`சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்!' - பெரியார் பிறந்தநாள் விழாவுக்குத் தடை போட்ட தேனி காவல்துறை

நூலக வளாகத்தில் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருந்த நிலையில், அனுமதியை மறுத்துள்ளது காவல்துறை.

Thenkarai Police Station
Thenkarai Police Station

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை கிளை நூலகம். இந்த நூலகத்தில் அடிக்கடி மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், பெரியாரின் 141-ம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அண்ணாவின் 111-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நடத்தப்பட இருந்தது. கூடவே, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயராஜுக்குப் பாராட்டு விழாவும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Thenkarai Police Station
Thenkarai Police Station

இதற்கான விழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இதை அறிந்த தென்கரை போலீஸார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், ` நிகழ்ச்சி நடத்தக் கூடாது' எனக் கூறியது மட்டுமல்லாமல், அதற்கான அதிகாரபூர்வ கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் பேரதிர்ச்சி.

அக்கடிதத்தில், `தென்கரை கிளைநூலக வளாகம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தக் கூடிய இடம். அங்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது' எனக் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், " மாணவ மாணவிகளுக்குப் பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவருக்குப் பாராட்டுவிழா எனத் விழாவை நடத்தத் திட்டமிட்டோம். அதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல், நிகழ்ச்சி நடந்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்திருக்கிறார்கள். பெரியார், அண்ணாவைப் பற்றிப் பேசுவதால் பிரச்னை ஏற்படுமா..." எனக் கொந்தளித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``நிகழ்ச்சியை நடத்துவதில் பிரச்னை இல்லை. அந்த இடம்தான் பிரச்னை. அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்கின்றனர்.

நூலக வளாகம்
நூலக வளாகம்

அமைதியான முறையில் நடக்க இருந்த பெரியார், அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் விழா நடந்து வந்த நிலையில், தற்போது சட்ட ஒழுங்குப் பிரச்னையைக் காரணம் காட்டித் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வேதனையடைய வைத்துள்ளது.