Published:Updated:

`தொடரும் பேருந்து நிலைய இடமாற்ற சர்ச்சை!'- பேரணாம்பட்டு முழுக்க ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

பேருந்துநிலைய இடமாற்றத்தைக் கண்டித்து, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர், பேரணாம்பட்டு மக்கள்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சி பேருந்துநிலையத்தை நகருக்கு வெளியில், 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

பேரணாம்பட்டு நகரில் உள்ள பேருந்துநிலையம்
பேரணாம்பட்டு நகரில் உள்ள பேருந்துநிலையம்

அந்தப் பகுதியில், விற்பனையாகாத வீட்டுமனைப் பிரிவுகள் உள்ளன. ரியல் எஸ்டேட் அதிபர்கள் மூன்றுபேர் ஒரு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்ததன்பேரில், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து 400 மீட்டர் உள்ளே வீட்டுமனைப் பிரிவின் இறுதியில் அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்துநிலையத்தை இடமாற்றம் செய்ய பேரணாம்பட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

அமைச்சர் வீரமணி
அமைச்சர் வீரமணி

``வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு காரணமாக பொதுமக்களின் எதிர்ப்பை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய முன்வரவில்லை’’ என்று கொதிக்கிறார்கள், பேருந்துநிலைய மீட்புக் குழு நிர்வாகிகள்.

``யார் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும். பேருந்து நிலையம் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும்’’ என்று அமைச்சர் வீரமணியும் விடாப்பிடியாக ஏற்கெனவே விளக்கமும் கொடுத்துவிட்டார். இந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள், பேரணாம்பட்டு நகர மக்கள்.

தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

அதில், ``பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் அரசாணையை ரத்து செய்யாவிட்டால், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அடுத்தடுத்த தேர்தல்களையும் புறக்கணிப்போம்’’ என்று அச்சிட்டுள்ளனர். அரசாணையைத் திரும்ப பெறும்வரை, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு