Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாட்டு வெடிகுண்டு வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்! - போலீஸில் புகாரளித்த வனத்துறை

போலீஸில் புகாரளித்த வனத்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாட்டு வெடிகுண்டைப் பறிமுதல் செய்த போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்தனர். கைதிகளில் ஒருவர் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாட்டு வெடிகுண்டு வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்! - போலீஸில் புகாரளித்த வனத்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாட்டு வெடிகுண்டைப் பறிமுதல் செய்த போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்தனர். கைதிகளில் ஒருவர் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
போலீஸில் புகாரளித்த வனத்துறை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள அடர் வனப்பகுதியில் பன்றி, மான், மிளா, யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்துவருகின்றன. மேலும், மலையடிவாரங்களில் தோட்டப்பயிர் விளைச்சலின் மூலம் அருகேயுள்ள ஊர்வாசிகள் விவசாயமும் செய்துவருகின்றனர். இந்த நிலையில், மலையடிவாரத் தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் அவ்வப்போது புகுந்து பயிர்களை நாசம் செய்துவரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்துவருகிறது.

நாட்டு வெடிகுண்டு
நாட்டு வெடிகுண்டு

இதைத் தடுக்கும் பொருட்டு அந்தப் பகுதி மக்கள் நாட்டு வெடிகுண்டு தயார்செய்து பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக சில சமயங்களில் திடீரென வெடித்து அசாம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும் புகார்‌ எழுந்தது. எனவே, வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து விலங்குகளை விரட்ட வெடிக்குண்டு பயன்படுத்துவோரைத் தடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திக்கோயிலில் தனியாருக்குச் சொந்தமான தோப்பில் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிவைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கூமாப்பட்டி காவல் நிலைய போலீஸார் ஐந்துக்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கார்த்திக், மாணிக்கம், டேனியல் ராஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேரைக் கைதுசெய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை
வனத்துறை

தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டர். அப்போது கைதிகளில் ஒருவரான டேனியல் ராஜ்குமார், இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அவருடன் பாதுகாப்புக்காக வனத்துறை காப்பாளர் ஒருவரும் உடன் சென்றிருக்கிறார். அப்போது, திடீரென வனக் காப்பாளரைக் கீழே தள்ளிவிட்டு கைதி டேனியில் ராஜ்குமார் தப்பி ஓடியிருக்கிறார். நிலைகுலைந்து கீழே விழுந்த காப்பாளர் எழுந்து, தப்பியோடிய டேனியல் ராஜ்குமாரைப் பல இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இரவு முழுவதும் தேடிப் பார்த்தும் கைதி டேனியல் ராஜ்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து, தப்பி ஓடிய கைதியைக் கண்டுபிடித்துத் தருமாறு காவல் நிலையத்தில் வனத்துறையினர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.