Published:Updated:

`மேகக் கூட்டத்துக்குள் சென்ற அடுத்த நொடி..!'-ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்தவர் அதிர்ச்சித் தகவல்!

வீடியோ எடுத்தவர்
News
வீடியோ எடுத்தவர்

முதலில் ஹெலிகாப்டர் நன்கு தெரிந்தது. மேகக் கூட்டத்துக்குள் சென்றவுடன், அடுத்த நொடியே மரத்தில் இடித்து, டமார் என்ற சத்தத்துடன் விழுந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து நாட்டையே உலுக்கிப்போட்டிருக்கிறது. இந்தக் கோர விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், விபத்து நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஹெலிகாப்டர் மேகக் கூட்டங்களுக்குள் சென்று கீழே விழுவது போன்ற வீடியோ வைரலானது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

இதை அந்தப் பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் எடுத்திருந்தனர். இணையத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலான நிலையில், கோவையைச் சேர்ந்த ஜோபால், நாசர் ஆகியோர்தான் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த வீடியோ தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜோபால் கூறுகையில், ``நான் போட்டோகிராபர். என் நண்பருடன் சுற்றுலா சென்றிருந்தேன். ரயில்வே டிராக்கில், சுற்றுலா சம்பந்தமான போட்டோக்கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தான், எங்கள் குடும்பத்தினரை அங்கே போட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு ஹெலிகாப்டர் சென்றது.

ஜோபால்
ஜோபால்

சத்தம் வித்தியாசமாக இருந்ததால் வீடியோ எடுத்தேன். மேகக் கூட்டத்தில் நுழைந்த சில நொடிகளில் 'டமார்' என்று சத்தம் கேட்டது. அதன் பிறகு நாங்கள் மேலே சென்றபோது, போலீஸ் வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து செல்ல முயன்றோம். ஆனால், முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விபத்து குறித்து எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர். அதனால் நாங்கள் எடுத்த வீடியோவைக் கொடுக்க கலெக்டர் அலுவலகம் சென்றோம். அங்கு யாரும் இல்லாததால் காவல் நிலையத்துக்கு சென்றோம். அவர்கள் ஸ்பாட்டுக்குப் போகச் சொன்னார்கள். அங்கிருந்தவர்களிடம் வீடியோவைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டோம்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

எல்லா இடங்களிலும் எங்கள் வீடியோ வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக நடந்தப்படும், அனைத்து விசாரணைகளுக்கும் எங்கள் தரப்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று எங்கள் தொலைபேசி எண்களை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இது குறித்து நாசர் கூறுகையில், ``புதன்கிழமை காலை கிளம்பி ஊட்டிக்குச் சென்றேன். செல்கிற வழியில் மேட்டுப்பாளையத்தைக் கடந்து காட்டேரி அருகே ரயில்வே டிராக் இருந்தது. அங்கு நாங்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். அங்கு ஒரு 10 நிமிடங்கள் இருந்திருப்போம். அங்கிருந்து வெளியில் வரும்போது என் நண்பர் ஒரு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

நாசர்
நாசர்

அப்போது, ஒரு ஹெலிகாப்டர் நல்ல சத்தத்துடன் பறந்துகொண்டிருந்தது. இரண்டே நொடியில் அந்த ஹெலிகாப்டர் மரத்தில் இடித்துக் கீழே விழுந்தது. அதைப் பார்த்தவுடன் ஒருவித பயம், பதற்றம் தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அங்கிருந்து ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாக ஏறிப் பார்த்தோம்.

எதுவும் தெரியவில்லை. சரி ஸ்பாட்டுக்குச் செல்வோம் என்றபோது, எதிரில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸெல்லாம் வந்துகொண்டிருந்தன. அவர்களிடம் கேட்டபோது ஹெலிகாப்டர் விபத்தாகிவிட்டதாகக் கூறினர். பிறகு நாங்கள் எடுத்த வீடியோவை பகிர்ந்துவிட்டு, கிளம்பிவிட்டோம். சுமார் 12:24 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன்பு

ஹெலிகாப்டர் வரும்போது நல்ல பனிமூட்டமாக இருந்தது. முதலில் ஹெலிகாப்டர் நன்கு தெரிந்தது. மேகக் கூட்டத்துக்குள் சென்றவுடன், அடுத்த நொடியே மரத்தில் இடித்து, டமார் என்ற சத்தத்துடன் விழுந்தது. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது” என்றார்.