Published:Updated:

பணம் கேட்டு தாயை நடுரோட்டில் அடித்த மகன்; தடுக்க ஓடோடி வந்த வளர்ப்பு நாய்!

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்

சண்முகத்தின் மனைவியும் நல்லம்மாளை தாக்கியதோடு, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டார். இந்நிலையில், நல்லம்மாளிடம் பாசமாகப் பழகிவந்த நாய் ஒன்று, ஓடிவந்து சண்முகத்தை பார்த்து குரைத்து, அவரை விரட்ட முயன்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாயிடம் பணம் கேட்டு தராததால் அவரை நடுரோட்டில் அடித்து, உதைத்த மகனை பரமத்தி போலீஸார் கைது செய்ததோடு, தலைமறைவான மருமகள் மற்றும் அவரின் உறவினர் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், முன்னதாக அந்த மூதாட்டியை அவரின் மகன் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றபோது, அந்த மூதாட்டி பாசமாக வளர்த்த நாய் ஒன்று, அவரை காப்பாற்றக் குரைத்த நிகழ்வு, காண்போரை நெகிழ வைத்தது.

சண்முகத்தை குரைக்கும் நாய்
சண்முகத்தை குரைக்கும் நாய்
`7 கிராமப் பகுதிகளில் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி!' - சாதித்த கரூர் மாவட்ட செவிலியர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் அருகே உள்ள பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவரின் கணவர் சின்னசாமி, வயோதிகம் காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. நல்லம்மாளை மகன் கைவிட்டதால், தனியாக வசித்து வருகிறார். மகன் சண்முகமும், மகள் கோமதியும் பொன்னேரிபட்டியிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். சண்முகம், தன் தாயார் பெயரில் இருந்த நான்கரை ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நல்லம்மாள் கூலி வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரின் மகன் சண்முகம், சண்முகத்தின் மனைவி ஜானகி (35), அவரின் உறவினர் பாலசுப்ரமணி (50) ஆகிய மூன்று பேரும் நல்லம்மாளிடம் இருந்த ரூ. 4 லட்சத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து தன் தாயை மகன் சண்முகம், தன் மனைவி, உறவினரோடு சேர்ந்து நடுரோட்டிலேயே அடித்து உதைத்து, தாக்கியுள்ளார்.

 சண்முகம்
சண்முகம்

அதோடு, நடுரோட்டில் நல்லம்மாளை சண்முகம் தரதரவென இழுத்துச் சென்றார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சண்முகத்தின் மனைவியும் நல்லம்மாளை தாக்கியதோடு, அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டார். இந்த நிலையில், நல்லம்மாளிடம் பாசமாகப் பழகிவந்த நாய் ஒன்று, ஓடிவந்து சண்முகத்தை பார்த்துக் குரைத்தது. அதோடு, அவர் மீது தாவி அவரை விரட்ட முயன்றது. ஆனால், சண்முகம் அந்த நாயையும் விரட்டியடித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நல்லம்மாளின் மகள் கோமதி, தன் தாயைக் காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

இந்த சம்பவம் குறித்து பரமத்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாயை தாக்கிய மகன் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சண்முகத்தின் மனைவி ஜானகி மற்றும் அவரின் உறவினர் பாலசுப்ரமணியையும் தேடி வருகின்றனர். தாயை மகன் நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவமும், வளர்ப்பு நாய் அதைத் தடுக்க முயன்ற சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு