Published:Updated:

``நானும் பணம் தாரேன்; எனக்கும் கவர்மென்ட் வேலை தாங்க!’’ - கலெக்டர் அலுவலகத்தில் அதிரவைத்த நபர்

சரவணக்குமார்

லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருக்கும் சரவணக்குமார் மீது, வரிசையாக புகார்கள் வரத் தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

``நானும் பணம் தாரேன்; எனக்கும் கவர்மென்ட் வேலை தாங்க!’’ - கலெக்டர் அலுவலகத்தில் அதிரவைத்த நபர்

லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருக்கும் சரவணக்குமார் மீது, வரிசையாக புகார்கள் வரத் தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

Published:Updated:
சரவணக்குமார்

கடந்த வாரம் விழுப்புரம் அருகே வாகன சோதனையில் கத்தை கத்தையாக 40 லட்ச ரூபாய் லஞ்சப் பணத்துடன், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ``என்னிடமும் அரசுப் பணிக்காக சரவணக்குமார் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டார்’’ என திருச்சியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்திருப்பதோடு, ``நானும் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன். எனக்கும் அரசுப் பணி வழங்குங்கள்” எனக் கூறி அதிரவைத்துள்ளார்.

புகாரளித்த சண்முகம்
புகாரளித்த சண்முகம்

திருச்சி பெரிய மிளகுப்பாறை, காமராஜர் மன்றத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சமீபத்தில் லஞ்ச விவகாரத்தில் சிக்கிய திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த புகார் மனுவுடன் திருச்சி கலெக்டர் அலுவலத்துக்கு வந்தார். இது குறித்து சண்முகத்திடம் பேசினோம். ``28.12.2020 தேதியன்று திருச்சியில் ஆதிதிராவிடர் நல விடுதி சமையலர் பணிக்கு 135 பேரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது. அதில் மொத்தம் 2,778 பேர் கலந்துகொண்டனர். அந்த நேர்காணலில் என்னுடைய மகளுடம் கலந்துகொண்டார். ஆனால், பணி நியமனம் கிடைக்கவில்லை. அதேவேளையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேருக்கு பணி நியமனம் கொடுக்கப்பட்டது. அதிலேயே பல குழப்பங்களும், தவறுகளும் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11.2.2022-ம் தேதியன்று திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரான சரவணக்குமார், போலியான ஆவணங்களை தயார் செய்து 15 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். இந்த பணி நியமனத்துக்காக ஒவ்வொருவரிடமும் 10 லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கியிருக்கிறார்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து பேசியவர், “குறிப்பாக சரவணக்குமாரின் டிரைவரான மணி என்பவரின் மகள் மற்றும் இரண்டு மகன்களுக்கும் போஸ்ட்டிங் போடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திருச்சியிலுள்ள அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் செந்தில், தொட்டியம் மாணவர் விடுதிக் காப்பாளர் கண்ணன் மற்றும் சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் செயற்பொறியாளர் கலைமோகன் உட்பட பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நானும் 10 லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன். எனக்கும் கவர்மென்ட் வேலையை தரச் சொல்லுங்க” என்றார்.

லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கியிருக்கும் சரவணக்குமார் மீது, வரிசையாகப் புகார்கள் வரத் தொடங்கியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism