Published:Updated:

`விரக்தியில் இருந்தேன்; மனைவி சொல்லே மந்திரமானது!’- வேலூரை அசத்தும் மாற்றுத்திறனாளி எலெக்ட்ரீஷியன்

எலெக்ட்ரீஷியன் சங்கரன்
எலெக்ட்ரீஷியன் சங்கரன்

குறையில்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லி என் மனதைத் திடப்படுத்தியவர், என் மனைவி ஜெயஸ்ரீ என நெகிழ்க்கிறார் மாற்றுத்திறனாளி எலெக்ட்ரீஷியன் சங்கரன்.

சாதிப்பதற்கு ‘ஊனம்’ தடையில்லை என்பதைப் பலநேரங்களில் தன்னம்பிக்கை மனிதர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். சாதிக்க முடியாவிட்டாலும், தன் குறையை நினைத்துத் துவண்டு போகாமல், இம்மண்ணில் பலர் வாழ்ந்தும் காட்டியுள்ளனர். அதற்கு, நல்ல மனிதர்களின் ஊக்கமளிப்பும் உறுதுணையும் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், ‘இவ்வுலகில் வாழவே முடியாது’ என்று விரக்தியில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மனைவி கைகொடுத்திருக்கிறார்.

சங்கரன்
சங்கரன்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கல்லூரைச் சேர்ந்த சங்கரன் (36) என்பவர்தான் அந்த இளைஞர். எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. ஆனாலும், மனதளவில் ஓடுகிறார்... ஓடிக்கொண்டே இருக்கிறார். மிக்ஸி, ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருள்கள் பழுதானால், ஒரு போன் செய்தால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கே சென்று சரிசெய்து கொடுக்கிறார் சங்கரன்.

சங்கரனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘போலியோ பாதிப்பால் பிறப்பிலேயே என்னுடைய இரண்டு கால்களும் சுருங்கிவிட்டன. இதுநாள் வரை எழுந்து நின்றதே இல்லை. ஐ.டி.ஐ வரை படிச்சிருக்கேன். என்னுடைய அப்பா- அம்மா இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னை கவனிச்சிக்க ஆளில்லை. அநாதைபோல இருந்தேன். மனம் இறுகிப்போனது. நம்மால் இந்த உலகத்தில் இனிமேல் வாழ முடியாதென்று தினமும் அழுதேன். சாகிற முடிவுகூட எடுத்தேன். 

குடியாத்தத்தில் சங்கரனைச் சந்தித்த இடம்
குடியாத்தத்தில் சங்கரனைச் சந்தித்த இடம்

நண்பர்கள்தான் எனக்கு உறுதுணையா இருந்தார்கள். சொந்தக்காரர்களே பெண் கொடுக்க யோசித்த நேரத்தில், திடீரென்று நான்கு வருஷத்துக்கு முன், பெண் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க. அங்கதான் ஜெயஸ்ரீயை முதல் முறையா பார்த்தேன். அவங்க என்னை மாதிரி மாற்றுத்திறனாளி இல்லை. அழகா இருப்பாங்க. இந்தப் பொண்ணுக்கெல்லாம் நம்மள பிடிக்குமா, அவங்களுக்குனு கனவு இருக்காதான்னு நினைச்சேன்.

என்கூட வந்தவர்களும் அப்படித்தான் நினைச்சாங்க. ஆனா, ஜெயஸ்ரீக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருந்தது. நான், அசந்து போயிட்டேன். இதெல்லாம் உண்மையானு என் கையை கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். ரெண்டு தரப்பிலும் பேசி முடிவு பண்ணி திருமணம் செய்துவைச்சாங்க. இப்போ, மூன்றரை வயசுல யாஷிகானு மகளும் ஒன்றரை வயசுல மோசஸ் யாக்கின் என்ற மகனும் இருக்காங்க. சந்தோஷமா வாழ்றேன். நல்லா சம்பாதிக்கிறேன். அதுக்கெல்லாம் காரணம், என் மனைவி. 

மாற்றுத்திறனாளி எலெக்ட்ரீசியன்
மாற்றுத்திறனாளி எலெக்ட்ரீசியன்

முதலில் வேலைக்குச் செல்லும்போது நிறைய அவமானங்களைச் சந்திச்சேன். ஆனா, நாமும் மற்றவர்களைப் போல வாழ முடியும். இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. குறையில்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லிச் சொல்லி என்னாலும் வாழ முடியும் என்று மனதை உறுதியாக்கியவர், என் மனைவி ஜெயஸ்ரீ. என்னைப் போன்றோருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். தயவுசெய்து குறையை நினைத்து மனம் தளராதீர்கள். தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்’’ என்றபடியே டூவீலரை ஸ்டார்ட் செய்தார் சங்கரன்.

பின் செல்ல