Published:Updated:

`இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி 1,000 கி.மீ சைக்கிள் பயணம்!' - மாற்றுத் திறனாளியின் சாதனை முயற்சி 

மாற்றுத் திறனாளியின் சைக்கிள் பயணம்
மாற்றுத் திறனாளியின் சைக்கிள் பயணம்

இயற்கை விவசாயத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக உடல் குறைபாட்டை மறந்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், மாற்றுத் திறனாளி இளைஞரான மணிகண்டன். 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 34 வயதான இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் அவருடைய இடது கால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. 

விழிப்புணர்வு பயணம்
விழிப்புணர்வு பயணம்

அதனால் ஏற்பட்ட குறைபாட்டைக் கண்டு துவண்டு விடாமல் தனி மனிதனாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். ஏற்கெனவே இயற்கை விவசாயம், மழை நீர் சேகரிப்பு, மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சிவங்கை முதல் சென்னை மற்றும் ராமேஸ்வரம் முதல் குமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

"என்னைப்போல யாரும் மதுவால் பாதிக்கப்படக்கூடாது!" - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

ஒரு கால் மட்டுமே இருந்தபோதிலும் அதைக் குறையாகக் கருதாமல் மூன்றாவது முறையாக குமரி முதல் சென்னை வரை சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். நெல்லைக்கு வந்த அவரிடம் பேசினோம்.``என் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறு வயது முதலாகவே எனக்கு இயற்கையின் மீதும் விவசாயத்தின் மூதும் ஈடுபாடு அதிகம்.

காலை இழந்ததால் ஏற்பட்ட விரக்தியில் இருந்தபோது அப்துல்கலாம் எழுதிய புத்தகத்தைப் படித்ததால் மனதில் புத்துணர்வு ஏற்பட்டது.
மணிகண்டன்

கிரிக்கெட் விளையாடும்போது நடந்த விபத்தில் கால் பறிபோனதும், எனக்கு வாழ்க்கையே முடிந்து விட்டது போலவே இருந்தது. ஒரு கால் இல்லாததால் சிறிது காலம் வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்தேன். அப்போது அப்துல்கலாம் நூலைப் படித்ததால் எனக்குத் தன்னம்பிக்கை ஏற்பட்டது.

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

நாம் சிறப்பாக வாழ்வது மட்டுமல்லாமல் நம்மாலும் பிறருக்கு உதவ முடியும் என நினைத்தேன். அதனால் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீதிருந்த அக்கறையின் காரணமாக அது தொடர்பான விவரங்களைப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதனால் மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகளை நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்சங்களை வலியுறுத்தி விழிப்புணர்வு  பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். 

மணிகண்டன்
மணிகண்டன்

கன்னியாகுமரியில் 13-ம் தேதி எனது விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கினேன். வழியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசுவது. விவசாயிகளைச் சந்திப்பது. இளைஞர்களிடம் உரையாடுவது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மரம் நடுவதன் அவசியம் பற்றி நான் கூறுவதை பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குமரி தொடங்கிய எனது பயணம் நெல்லை வழியாக மதுரை சென்று சேலம், கோவை வழியாக 20 மாவட்டங்களைக் கடந்து சென்னையைச் சென்றடைய இருக்கிறது. சுமார் 1000 கி.மீ தூரம் ஒற்றைக் காலுடன் சைக்கிளில் சென்று, ஜனவரி 1-ம் தேதி மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் எனது பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்’’ என்றார். 

மணிகண்டனின் விழிப்புணர்வு பயணம்
மணிகண்டனின் விழிப்புணர்வு பயணம்

மணிகண்டனுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில்  தங்கும் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அவருடன் உதவிக்காக விவேக், சுப்புராமன், செல்வகுமார் ஆகியோர் செல்கிறார்கள். இவர்களில் சுப்புராமன் என்பவர் பார்வைக் குறைபாடு கொண்டவர். அவரும் ஆர்வத்தோடு உடன்  வருவதை மணிகண்டன் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு