Published:Updated:

`ஒற்றைக் காலில் பயணம்; சென்னை டு கன்னியாகுமரி!' -நெகிழவைக்கும் ராமநாதபுரம் இளைஞரின் முயற்சி

காற்று மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்றால், மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.

மணிகண்டன்
மணிகண்டன்

காற்று மாசுபாட்டைத் தடுக்க மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் மாற்றுத் திறனாளி மணிகண்டன். அவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து காற்று மாசுபடுவதால் ஏற்படும் ஆபத்தையும் மரக்கன்றுகள் நடுதலின் அவசியத்தையும் விளக்கிக்கொண்டிருந்தார்.

பயணம்
பயணம்

மணிகண்டனிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த மாவட்டம் ராமநாதபுரம். என் மனைவி பெயர் தாமரைச்செல்வி. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட காயத்தில் என்னுடைய இடதுகாலை எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு ஒற்றை வலதுகாலில் சைக்கிளை ஓட்டுவேன். அதை மக்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்

Vikatan

மக்களின் இந்தப் பார்வையைப் பொதுநலத்துக்காகப் பயன்படுத்த நினைத்தேன். இதையடுத்து, முதல்முறையாக 2008-ல் சாலை விதிகளை மதிக்க வேண்டும்; கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கை முதல் சென்னை வரை சைக்கிள் பிரசாரம் செய்தேன். அதன்பிறகு 2013-ல், மழைநீர் சேகரிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி ராமேஸ்வரம் டு கன்னியாகுமரி வரையில் சைக்கிள் பிரசாரம் செய்தேன்.

2017-ம் ஆண்டில் அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காகப் பொதுமக்களை வீடுவீடாகச் சந்தித்து இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினேன். சமீபத்தில் டெல்லி, சென்னையில் காற்று மாசுபாடு அடைந்து குழந்தைகளும் முதியவர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானதை நாளிதழில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

மணிகண்டன்
மணிகண்டன்

இதையடுத்து காற்று மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்றால், மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.

கடந்த 13-ம் தேதி கன்னியாகுமரியில் போலீஸ் டி.எஸ்.பி பாஸ்கரன் என்னுடைய விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் குக்கிராமங்களிலும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க மரங்களை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டுப் பயணிக்கிறேன்.

ஒவ்வொரு மாவட்ட மக்களும் எனக்கு நல்லமுறையில் வரவேற்பு கொடுக்கிறார்கள். நான் கூறுவதை உற்றுக் கவனிக்கிறார்கள். வரும் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தில் சென்னை மெரினா கடற்கரையில் என்னுடைய விழிப்புணர்வு பிரசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறேன்'' என்றபடியே ஒற்றைக் காலில் சைக்கிளை இயக்கத் தொடங்கினார் மணிகண்டன்.