`ஆதரவற்றவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனையிலும் மறுவாழ்வு மையம் தேவை!' - பொதுநல வழக்கு

ஆதரவற்றவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அதில், ``வயது முதிர்ந்த காலத்தில் ஆதரவு இல்லாமல் இருக்கும் ஏழை எளியோர் சாலை ஓரங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனக் கிடைத்த இடங்களில், எவ்விதமான அடிப்படை வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இதைக் கண்காணித்து பொது சுகாதார சேவை மையங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், அந்தப் பணிகள் முறையாக நடைபெறுவது தொடர்பாக எந்தத் திட்டங்களும் பொது சுகாதார சேவைத் துறையிடம் இல்லை. முதியவர்கள் சுயமாக தங்களுக்குத் தேவையான பராமரிப்புகளை மேற்கொள்ள முடியாத முதுமை நிலையில், நோய்வாய்ப்படுகையில் அவர்களின் நிலை மேலும் கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கான சிறப்பு மறுவாழ்வு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகின.
சிகிச்சை எடுத்த பின்பு, வேறு இடங்களுக்குச் செல்ல வழியில்லாத முதியவர்கள், இந்தச் சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். முதன்முறையாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தைப் பின்பற்றி, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையிலும் இதேபோன்று சிறப்பு மறுவாழ்வு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல கைவிடப்பட்ட ஆதரவற்றவர்கள் உள்ளனர்.

எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்டோருக்கான மறுவாழ்வு வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனத் தனது பொதுநல மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு வழக்கு குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர், சமூக நலத்துறை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.