Published:Updated:

`சாதி, மத சண்டையில்லாத கிராமம் இது!'- திருவள்ளுவர் சர்ச்சையால் பதறும் பிள்ளையார்பட்டி

`காவல்துறையினரின் அலட்சியமே திருவள்ளுவர் சிலை விவகாரம் பூதாகரமாக மாறியதற்குக் காரணம்' எனப் பிள்ளையார்பட்டி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கிராமத்தில், திருவள்ளுவர் சிலைக்குச் செய்யப்பட்ட அவமரியாதையால் மிகவும் வேதனைப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்பு பேப்பரை ஒட்டி கண்ணை மறைத்தும் முகத்தில் சாணம் பூசியும் மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்தனர். இதையடுத்து, பிள்ளையார்பட்டி மக்கள் திருவள்ளுவர் சிலைமுன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்தச் செயலைச் செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் திருவள்ளுவர் சிலைக்குப் பாதுகாப்பாக கம்பிக்கூண்டு அமைக்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். போலீஸாரும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியதையடுத்து மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

திருவள்ளுவர் சிலைக்குச் செய்யப்பட்ட அவமரியாதையைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நேற்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திருவள்ளுவர் சிலைக்குக் காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, அன்று இரவே சொந்த ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.

`காவல்துறையினரின் அலட்சியமே திருவள்ளுவர் சிலை விவகாரம் பூதாகரமாக மாறியதற்குக் காரணம்' எனப் பிள்ளையார்பட்டி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், `கட்சி தலைவர்களோ அல்லது அமைப்பின் தலைவர்களோ எங்கள் ஊருக்கு வராமல் இருந்தாலே பிரச்னை தானாக சரியாகிவிடும்' என்றும் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்குப் பாதுகாப்பு
திருவள்ளுவர் சிலைக்குப் பாதுகாப்பு

பிள்ளையார்பட்டி ஊர் மக்களிடம் பேசினோம். ``திருவள்ளுவருக்கு செய்யப்பட்ட அவமரியாதையான செயல் எங்கள் மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எந்தவித சாதி, மத சண்டைகளும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். திருவள்ளுவர் சிலை விவகாரத்துக்குப் பிறகு காவல்துறையினர் எங்கள் ஊரில் உள்ளவர்கள் யாரேனும் சாதிரீதியாக இதனைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா என விசாரித்தனர். அத்துடன் பி.ஜே.பி, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களிடமும் விசாரித்தனர். அவர்களுக்கு இதில் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரிந்ததும் விட்டுவிட்டனர்.

`திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமானவர் அல்ல!' - கமல்ஹாசன்

தொடக்கத்திலிருந்தே இந்தப் பிரச்னையில் மக்கள் ஒன்று கூடிவிடக்கூடாது, போராட்டத்தை தொடரக்கூடாது என்பதில் மட்டுமே காவல்துறையினர் கவனமாக இருந்தனர். இதன் காரணமாக, திருவள்ளுவர் சிலையின் பாதுகாப்பு விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டனர். இதைப் பயன்படுத்திக்கொண்டே அர்ஜுன் சம்பத் காவித்துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்தார். போதிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இப்போது திருவள்ளுவர் சிலைக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை பலபடுத்தியிருக்கின்றனர். மேலும், கட்சித் தலைவர்களையும் அனுமதிக்கவில்லை.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

தஞ்சை சரக டி.ஐ.ஜி, லோகநாதன் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகிறார். உடனே அவர்களை கைது செய்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அத்துடன் அரசியல் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் எங்கள் ஊருக்கு வராமல் இருந்தாலே இந்தப் பிரச்னை தானாகவே அமைதியாகி விடும். திருவள்ளுவரை வைத்துச் செய்யும் அரசியலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை'' என வேதனையோடு பேசி முடித்தனர்.