ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நீலகிரியில், ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அரசு பூங்காக்கள் தோட்டக்கலைத்துறை மூலமும், சூழல் சுற்றுலாவை வனத்துறையும், படகு இல்லங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் நிர்வகித்துவருகின்றன.

ஊட்டியிலுள்ள மிக முக்கியச் சுற்றுலாத்தலங்களில் ஊட்டி ஏரியில் நிறுவப்பட்ட படகு இல்லமும் ஒன்று. தொட்டபெட்டா மலைச்சரிவில் உருவாகி ஊட்டி நகரைக் கடந்து மாயாற்றில் கலக்கும் வெள்ளிநீரோடை எனப்படும் கோடப்பமந்து கால்வாயின் குறுக்கே நீலகிரியின் முதல் ஆட்சியரான ஜான் சல்லீவனால் 1824-ம் ஆண்டு, 65 ஏக்கர் பரப்பளவில் இது நிறுவப்பட்டது.
ஊட்டி நகரின் கழிவுகளால் கடுமையாக மாசடைந்த ஊட்டி ஏரியைச் சீரமைக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றளவும் சீரமைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படகுச் சவாரி மேற்கொள்ளும் இந்தப் படகு இல்லத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்திருப்பது சுற்றுலாப்பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

இது குறித்துப் பேசிய கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் சிலர், ``ஊட்டி படகு இல்ல ஏரி சிறப்பாக இருக்கும் எனச் சொன்னார்கள். ஆர்வத்துடன் வந்தோம். ஆனால், படகைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், காலி மதுபாட்டில்கள் எனக் குப்பைக் குவியல் மிதக்கிறது" என்றனர்.
இது குறித்து படகு இல்ல மேலாளரிடம் கேட்டோம். ``இவற்றை மேற்பார்வை செய்வது பொதுப்பணித்துறைதான். ஏரிக்கு வரும் நீரைச் சுத்திகரிக்கும் இடத்தில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக கழிவுகள் தென்படுகின்றன. இரு தினங்களுக்கு ஒரு முறை குப்பைகளை வந்து அகற்றிச் செல்கிறார்கள். பொங்கலுக்குள் சரியாகிவிடும்" என்றார்.