Published:Updated:

சிந்தடிக் ஓடுதளப் பணியால் மைதானத்தை மறந்த அதிகாரிகள்! - ஊட்டி சர்ச்சை

அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மோசமான திட்டமிடலால், ரூ.7 கோடியில் விளையாட்டு மைதானப் பணிகள் நிறைவடைந்தும் பயன்படுத்த முடியாத வினோத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

synthetic playground
synthetic playground ( Arun.K )

'கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை' என்பதுபோல, ஊட்டியில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கப்போய், இப்போது அதைப் பயன்படுத்த முடியாமலும் சீரமைப்பு முடியாத வினோத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புல் மைதானத்தைச் சுற்றிலும் விலை மதிப்புமிக்க சிந்தடிக் ஓடுதளம். ஆனால், இதற்கு சேதம் ஏற்படாமல் மைதானத்துக்குள் கனரக உருளைகளை எடுத்துச்செல்ல வேண்டும். இதுவே விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கான விபரீதப் போட்டி.

synthetic playground
synthetic playground

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன. ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ள ஊட்டியில், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களின் விளையாட்டுத்திறன் அதிகரிக்கிறது. இதனால் பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து மலைமேலிட பயிற்சியை (high altitude training) பெற்றுச் சென்றனர். இந்த மைதானத்தில் சிந்தட்டிக் ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

synthetic playground
synthetic playground

அதன்பின்னர்,சிந்தெட்டிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலேயே ஓடுதளம் அமைக்கும் பணியை டெண்டர் எடுத்தவர் காலாவாதியான பொருள்களை கொண்டு வந்ததால், அதனை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதனால், சில மாதங்கள் ஓடுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் தாமதமானது. பின், முறையான பொருள்கள் கொண்டு ஓடுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக தார் கலவைக்கு மேல் ரசாயன கலவை பயன்படுத்தி ஓடுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாமல் மேலும் சில மாதங்கள் பணி தாமதமானது.

பின்னர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிந்தட்டிக் ஓடுதளம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக நிறைவடைந்தது. அப்போதே, மைதானம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓடுதளம் அமைக்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அதிகாரிகள் உள்ளே இருந்த விளையாட்டு மைதானத்தை மறந்துவிட்டனர். சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும்போது மண் மற்றும் கற்குவியல்களை புல் மைதானத்துக்குள் கொட்டிவிட்டனர். இதனால் விளையாட்டு மைதானம் மேடு பள்ளமாக காணப்பட்டது. புல்வெளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாமலேயே சுற்றிலும் சிந்தடிக் ஓடுதளத்தை அமைத்துவிட்டனர். இதனால் கனரக வாகனங்கள் உள்ளே செல்ல முடியாததால் மைதானம் சீரமைக்கப்படமால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பணிகள் நிறைவடைந்ததும் பயன்படுத்த முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

synthetic playground
synthetic playground

இது குறித்து ஊட்டியைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் கூறுகையில், ``இந்திய அளவில் மலை மேலிட பயிற்சிக்கு இந்த மைதானம் முக்கியத்துவம் வாய்ந்தது. குளிர் பிரதேச நாடுகளில் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவது அவசியமாகிறது. புல் மைதானமாக இருந்த இதை சிந்தடிக் ஓடுதளம் அமைக்கிறோம் என்ற பெயரில் நாசம் செய்துவிட்டனர். இப்போது யாரும் இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மைதானம் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் பாதிப்படைந்துள்ளனர்" என்றார்.

இது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஒப்பந்ததாரரின் மோசமான திட்டமிடலால் தற்போது மைதானத்தை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்தை சுற்றிலும் விலை உயர்ந்த ஓடுதளம் அமைக்கப்பட்டுவிட்டதால் கனரக வாகனங்கள் உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை. சிறிய உருளைகளை கொண்டு சமன் செய்து பார்த்தோம். ஆனால் சீராகவில்லை. மேடுபள்ளமான மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டால் காயம் ஏற்பட வாய்ய்பு உள்ளது. இதனால் யாரும் விளையாட அனுமதிக்கப்படவில்லை. மைதானத்தை சீரமைப்பது எங்களுக்கே புதிராக உள்ளது" என்றனர்.

synthetic playground notice
synthetic playground notice

``மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உடனடியாக தலையிட்டு எச்ஏடிபி மைதானத்தை முழுமையாக சீரமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.