Published:Updated:

`பிரதமர் பாராட்டியதை நம்ப முடியல; எதையும் எதிர்பார்த்து உதவி செய்யல!’ - நெகிழும் `சலூன்கடை’ மோகன்

மோகன் குடும்பம்
மோகன் குடும்பம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அப்பா, நான் காலேஜுக்கு போக இன்னும் நாள் இருக்கு. அதனால மக்களுக்கு உதவி செய்வோம் என்று மகள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தினாங்க.

கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்காகத் தன் மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்த பணத்தின் மூலம் உதவி வழங்கிய சலூன் கடைக்காரர் மோகனின் செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மோகன் நிவாரணம் வழங்கிபோது
மோகன் நிவாரணம் வழங்கிபோது
ஈ.ஜெ.நந்தகுமார்

பள்ளியில் படித்து வரும் தன் மகளின் எதிர்காலத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களைக் கடந்த மாதம் வழங்கினார். இவரின் சேவையை அனைவரும் பாராட்டினார்கள்.

இந்தநிலையில் இன்று காலை வானொலியில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,``கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பு மூலம் ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். மதுரையில் சலூன்கடை வைத்திருக்கும் மோகன் என்பவர், மகளின் படிப்பு செலவுக்காகத் தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயை ஊரடங்கால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று பேசியுள்ளார்.

மோகன் குடும்பம்
மோகன் குடும்பம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தத் தகவல் மதுரை முழுவதும் பரவவே சலூன் கடைக்காரர் மோகனை நேரில் சென்று மக்கள் பாராட்டி வருகிறர்கள். ``பிரதமர் பாரட்டிப் பேசியதை எப்படி உணர்கிறீர்கள்?'' என்று மோகனிடம் கேட்டோம்,

``எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விளம்பரத்துக்காக நான் எதையும் செய்யல. நான் தொழில் நடத்தி வரும் பகுதியில் கொரோனா ஊரடங்கால் மக்கள் கஷ்டப்பட்டு வருவதை பார்த்து கவலையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் என் மகள், மனைவி இருவரும் கஷ்டப்படும் மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவர்களும் பேச ஆரம்பித்தார்கள். அதோடுதான் மகளுக்காக வைத்திருந்த சேமிப்புப் பணத்தை எடுத்து எல்லோருக்கும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினேன். இந்த விஷயத்தை அப்போதே பலரும் பாராட்டினார்கள். அதைத்தொடர்ந்து தேடி வந்து கேட்பவர்களுக்கும் உதவி செய்ய ஆரம்பித்தேன்.

மோகன் நிவாரணம் வழங்கிபோது
மோகன் நிவாரணம் வழங்கிபோது
ஈ.ஜெ.நந்தகுமார்

`பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அப்பா. நான் காலேஜுக்குப் போக இன்னும் நாள் இருக்கு. அதனால மக்களுக்கு உதவி செய்வோம்’ என்று மகள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தினாள். அந்த விஷயம் பிரதமர் வரைக்கும் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன் மதுரைக்கு வந்தேன். அப்படிப்பட்ட சின்ன கிராமத்தில் பிறந்த என்னை பிரதமர் பாரட்டியதற்கு அவருக்கு கோடானகோடி நன்றி'' என்றார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக.

அடுத்த கட்டுரைக்கு