Published:Updated:

`சிறையில் குருவை தீர்த்துக்கட்ட சதி நடந்தது!'- பா.ம.க வைத்தி சொல்லும் ஃப்ளாஷ்பேக்

அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கருக்குப் பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் பதில் அளித்துள்ளார்.

guru
guru

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குருவுக்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் கடந்த 17-ம் தேதி மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``2011-ல் குருவைக் கொல்ல தி.மு.க முயற்சி செய்தது" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவசங்கர், பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சிவசங்கரின் விளக்கம் குறித்து, பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் வைத்தியிடம் பேசினோம். ``குருவின் மணிமண்டபத்தைத் திறந்துவைத்த மருத்துவர் அய்யா, தி.மு.க பற்றிப் பேசினார். `குருவை பலமுறை நயவஞ்சகமாகக் கொலை செய்ய திட்டமிட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். அது வைத்திக்கு தெரியும். நானும் ஜி.கே.மணியும்தான் பலமுறை டி.ஜி.பி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு குருவின் பாதுகாப்பை உறுதி செய்தோம்' என்று பேசினார். இதற்கு அரியலூர் மாவட்ட வாரிசு அரசியல்வாதி ஒருவர் (சிவசங்கர்) பதில் கூறுவதாக எண்ணி உளறிக் கொட்டியுள்ளார். மருத்துவர் அய்யாவைக் கேள்வி கேட்க தமிழகத்தில் தற்போது எவருக்கும் தகுதி இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் வாரிசு அரசியல்வாதியின் கேள்விக்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

vaithi
vaithi
``என்னை விமர்சனம் செய்பவர்கள் கங்காணிகள்..!”
 - குரு மணிமண்டபம் திறப்பு விழாவில் கொதித்த ராமதாஸ்

குருவை முதன் முதலில் 149 நாள்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தி.மு.க. அப்போது சிறையில் வைத்தே குருவை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர் தி.மு.க-வினர். அதை முறியடித்தார் மருத்துவர். 2011-ம் ஆண்டு கூட்டணி எப்படி அமைந்தது என்று இந்த வாரிசு அரசியல்வாதிக்கு தெரியவாய்ப்பில்லை. மருத்துவர் அய்யா தனது இல்லத் திருமண அழைப்பிதழை வழங்க மறைந்த கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, அய்யாவின் கையை எப்படி எல்லாம் பிடித்துக் கொண்டு கூட்டணி அமைத்தார் என்று உயர்மட்டத் தலைவர்களுக்குத் தெரியும்.

பிறகு சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டு குரு போட்டியிட்டார். ஆனால், கருணாநிதியே ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க-வுக்கு என்று அறிவித்தும் தி.மு.க நிர்வாகிகள் ஒரு சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. அதையும் மீறி குரு பிரமாண்ட வெற்றி பெற்றார் என்பது வரலாறு. ஆனால், இந்த வாரிசு அரசியல்வாதி என்ன சொல்கிறாரென்றால், ஜெயங்கொண்டம் தொகுதியை குருவுக்கு பரிந்துரைத்து பெற்றுத் தந்தது திருமாவளவன் என்கிறார். குருவை நன்கு அறிந்த தி.மு.க-வினர்கூட இந்த அபாண்டமான பொய்யை நம்ப மாட்டார்கள். இவ்வளவு கேள்வி கேட்கும் இந்த வாரிசு அரசியல்வாதி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகக் காரணம் பா.ம.க தான். இது, அவரே மறுக்க முடியாத உண்மை.

கடந்த 2016 தேர்தலில் நாங்கள் தனித்துக் களம் கண்டோம். இந்த வாரிசு அரசியல்வாதி தி.மு.க சார்பில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டார். என்ன சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்டார் தெரியுமா. முன்னொரு காலத்தில் வன்னியர் ஒருவர் இங்கே எம்.எல்.ஏ-வாக இருந்தது கோ.சிவப்பெருமாள்தான். அதன்பிறகு தான்தான் வன்னியராக அரியலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி ஓட்டு கேட்டார். ஆனால், இவர் நடிப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றபடி இவரும் இவர் தந்தையும் சமூகத்துக்குச் செய்த துரோகங்களை நாம் இவ்வுலகுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரியலூர் மாவட்ட தி.மு.க-வினரை கேட்டால் அவர்களே தெளிவாகக் கூறுவார்கள். இவ்வளவு காலம் கழித்து இக்குற்றச்சாட்டை இப்போது ஏன் கூற வேண்டும் என்று வினா எழுப்பியுள்ளார்.

ramadoss
ramadoss

இவ்வினாவுக்கான பதிலை மருத்துவர் அய்யா 2008-ம் ஆண்டே கூறிவிட்டார். தேர்தலில் வெற்றி என்பது இவர் தந்தைக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின் இவரது நல்ல நேரம் நம்முடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது தி.மு.க. பா.ம.க தயவுடன் மட்டுமே 2 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் இந்த வாரிசு அரசியல்வாதி. பா.ம.க தயவில்லாமல் இருந்திருந்தால் இவரது அரசியல் வாழ்க்கை சொந்த ஊரிலேயே முடங்கிப் போயிருக்கும். குரு மறைந்த பிறகு பல வதந்திகளையும் அவதூறுகளையும் வாரி இறைத்தது இந்தக் கும்பல். இக்கும்பலின் சூழ்ச்சிகளை உணர்ந்த வன்னியர்கள் இவர்களது குற்றச்சாட்டுகளை இம்மியளவும் ஏற்காமல் குருவின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டார்கள். இதை கண்டு விரக்தியடைந்த இக்கும்பல் இப்போது பிதற்ற ஆரம்பித்துள்ளது. இதை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ள நாங்கள் தயார்" என்று காட்டமாக முடித்தார்.

பா.ம.க வைத்தியின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க மாவட்ட செயலாளர் சிவசங்கரிடம் பேசினோம். "ஆமாம். நான் மாவட்ட செயலாளர்தான். ஆனால் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவன். அத்தோடு கட்சியில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தையும் தெரிந்தவன் என்ற முறையில் நான் பேசுவதில் எந்த தவறும் இல்லை. கூட்டணி வைக்க நோக்கம் இல்லை என்றால் எதற்காக கலைஞரிடம் பத்திரிகை வைக்க ராமதாஸ் நேரில் வந்தார். இதற்கு விளக்கம் தரமுடியுமா?. கலைஞரிடம் ராமதாஸ் என்ன பேசினார் என்று வைத்திக்கு தெரியுமா?. 1996-ல் ஆண்டிமடம் தேர்தலில் எனது தந்தையை எதிர்த்து தீரன் போட்டியிட்டார்.

sivasankar
sivasankar

அப்போது, நடந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "நீங்கள் தேர்வு எழுதுகிறீர்கள். எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது உங்களுடைய பொறுப்பு. எனக்கு தேவை வெற்றி மட்டுமே" என்று பகிரங்கமாக பேசினார். அப்படி பேசியதோடு தேர்தல் பூத்துகளை கைப்பற்றி எனது தந்தையை தோல்வி அடையச் செய்தார். இதனை தெரிந்து கொண்டுதான் தி.மு.க தலைவர் கலைஞர் 1998-ல் எனது தந்தையை ராஜ்யசபா எம்.பி ஆக்கினார். எங்களுடைய வளர்ச்சி எல்லாமே தி.மு.க-வை சேரும். இவர்களால் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று சொல்வது கண்ணை மூடிக்கொண்டு ஊரெல்லாம் இருட்டாக இருக்கிறது என்று சொல்வதற்கு நிகராக உள்ளது" என்றார் கொதிப்புடன்.