Published:Updated:

`மனைவி பேச்சை ஓரளவுக்கு மட்டும் கேளுங்கள்!'- தாயை தெருவில் விட்டுச்சென்ற மகன்களை எச்சரித்த டிஎஸ்பி

ஒரு தாயின் மூலமாகத்தான் இந்த உலகத்திற்கு வருகிறீர்கள். அவர் கஷ்டப்படும்போது நீங்கள் நன்றாக வாழ்ந்தால் இந்தச் சமுதாயம் உங்களை ஏற்றுக்கொள்ளுமா?

பட்டம்மாள்
பட்டம்மாள்

``இருவரும் தாயை ஆளுக்கு 15 நாள் வைத்திருக்கவேண்டும். அவருக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. அப்படி வந்தால் உங்களை தொலைச்சிடுவேன்" என்று கையொப்பம் வாங்கி அனுப்பியிருக்கிறது காவல்துறை.

மகன்கள் விட்டுச்சென்ற  பட்டம்மாள்
மகன்கள் விட்டுச்சென்ற பட்டம்மாள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி பட்டம்மாள். 95 வயதான இவரை, அவரது மகன்கள் சண்முகம் மற்றும் சதாசிவம் ஆகியோர் நடுரோட்டில் விட்டுச்சென்றனர். இரவு முழுவதும் பனியில் கிடந்தவரை மறுநாள் காலையில் கிராம மக்கள் சேர்ந்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, ``இரண்டு மகன்கள், மகள்கள் இருந்தும் தவிக்கவிடப்பட்ட தாய்!- 95 வயது மூதாட்டியால் கலங்கிய ஊர்மக்கள்" என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தச் செய்தி எதிரொலியாக அரியலூர் எஸ்பி ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் ஆகியோர் சண்முகம் மற்றும் சதாசிவத்தை அழைத்து இரண்டு நாள்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பட்டம்மாள்
பட்டம்மாள்

இந்தப் பேச்சுவார்த்தையில் தாய் பட்டம்மாளை மூத்த மகன் சண்முகம் 15 நாள்களும், இளைய மகன் சதாசிவம் 15 நாள்களும் வைத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு முறையாகச் சிகிச்சை அளித்து வேண்டிய உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். அதற்கு அவர்கள், `எங்களுடைய தாய் ஒரு இடத்தில் ஒழுங்காக இருக்கமாட்டார்' என்று சொல்ல அதற்கு போலீஸார், `நீங்களும் சிறு வயதில் அப்படித்தான் இருந்திருப்பீர்கள்.

அவர் நினைத்திருந்தால் நீங்கள் இவ்வளவு பெரிய ஆளாக ஆகியிருக்க முடியாது' என்று கூறியதோடு, `இருவரும் ஆளுக்கு 15 நாள் வைத்திருக்கவேண்டும். அவருக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. அப்படி வந்தால் உங்களை தொலைச்சிடுவேன்' என்று கையொப்பம் வாங்கி அனுப்பியிருக்கிறது காவல்துறை. இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டம்மாளுக்குத் தேவையான தலையணைகள், துணி வகைகள் மற்றும் பழவகைகளை டிஎஸ்பி அனுப்பி வைத்தார்.

டி.எஸ்.பி மோகன் தாஸ்
டி.எஸ்.பி மோகன் தாஸ்

டி.எஸ்.பி மோகன்தாஸிடம் பேசினோம். ``இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. அந்த அம்மா வீதியில கிடந்ததை வீடியோவில் பார்த்தபோது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒரு தாயின் மூலமாகத்தான் நீங்கள் இந்த உலகத்திற்கு வருகிறீர்கள். அவர்கள் கஷ்டப்படும்போது நீங்கள் நல்லா வாழ்ந்தால் இந்தச் சமுதாயம் உங்களை ஏற்றுக்கொள்ளுமா. உங்கள் அனைவருக்கும் ஒரு அட்வைஸ். ஓரளவுக்கு மனைவின் பேச்சைக் கேளுங்கள். இதுபோன்று தாயை மதிக்காதவர்கள் யாரேனும் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் கொதிப்புடன்.