Published:Updated:

அரியலூர்: `போராடினால் ரெளடிப் பட்டியலில் சேர்க்கப் பார்க்கிறார்கள்!' - சமூகச் செயற்பாட்டாளர் வேதனை

தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்
தங்க.சண்முக சுந்தரம் மக்கள் சேவை இயக்கம்

`மக்கள் பிரச்னைக்காக இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் என்று ஓர் இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இது போன்ற செயல்களை ஒடுக்க போலீஸார் நினைக்கிறார்கள்.’

மக்கள் பிரச்னைக்காகப் போராட்டம் நடத்தும் சமூக செயற்பாட்டாளர் தங்க.சண்முக சுந்தரத்தை அரியலூர் போலீஸார், ரெளடிகள் பட்டியலில் சேர்க்கத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுவருவதாக எழும் குற்றசாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறனர்.

தங்க.சண்முகசுந்தரம்
தங்க.சண்முகசுந்தரம்

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க.சண்முக சுந்தரம். இவர், `மக்கள் சேவை இயக்கம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். சமூகநலன் கருதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், அரசை விமர்சனம் செய்யும் வகையில் பல போராட்டங்களையும் நடத்திவருகிறார். அத்தோடு, நெடுவாசல் போராட்டம் முதல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் வரை எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறாஅர். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.

இவர் தொடர்ந்து மக்களைத் திரட்டி போராட்டம் செய்வதாகக் கூறி இவர்மேல் ஏராளமான வழக்குகள் உள்ளன. அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு `தொடர் தொல்லை தரும் நபர்’ (டபுள் மாங்கர் பட்டியலில்) என்ற பட்டியலில் தங்க.சண்முகசுந்தரத்தைச் சேர்க்க அரியலூர் எஸ்.பி சீனிவாசன் முயல்வதாகக் குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.

தங்க.சண்முகசுந்தரம்
தங்க.சண்முகசுந்தரம்

என்ன நடந்தது என்று தங்க சண்முகசுந்தரத்திடம் பேசினோம். ``இந்த அரசை விமர்சனம் செய்து பேசினாலே அவர்களை குற்றவாளியாகத்தான் பார்க்கிறது அரசு. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற 600 கி.மீ மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதோடு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து, போராட்டத்துக்கு அனுமதி பெற்று தொடர்ந்து போராட்டம் நடத்தினேன். அதுபோல் நான் மக்கள் பிரச்னைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன்.

அதனால் போலீஸார் நூற்றுக்கணக்கான வழக்குகளை என்மீது பதிவு செய்திருக்கிறார்கள். மக்களின் அடிப்படை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், சிமென்ட் ஆலைகள் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் செய்வது காவல்துறைக்குப் பெரிய இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ரெளடிகளைப்போல நடந்துகொண்டார்கள். காவல்துறையைக் கெட்ட வார்த்தைகளால் பேசுவதாகக் கூறி, என்மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன்னர் இதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு கொரோனா காலகட்டத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது கை செயலிழந்துவிட்டது.

சாமிநாதனுக்காக நடந்த போராட்டம்
சாமிநாதனுக்காக நடந்த போராட்டம்

அதனால் அரியலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் நான் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்டதற்கு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மக்கள் பிரச்னைக்காக இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் என்று ஓர் இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இது போன்ற செயல்களை ஒடுக்க போலீஸார் நினைக்கிறார்கள். எத்தனை முறை என்னைச் சிறையில் அடைத்தாலும், எனது சமூகப்பணி தொடரும்" என்றார்.

இது குறித்து அரியலூர் எஸ்.பி சீனிவாசனிடம் பேசினோம். ``மாவட்டத்தில் `போராட்டங்கள்’ என்ற போர்வையில் தொடர்ந்து சிக்கல்களைக் கொடுத்துவரும் நபர்களை விசாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒரு லெட்ஜெர் ஃபாலோ பண்ணுவார்கள். அதன் அடிப்படையில் இவரையும் ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் இவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இவரைப் பற்றி முழு விவரங்களை எடுத்துக்கொண்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என்று போனைத் துண்டித்தார்.

அடுத்த கட்டுரைக்கு