Published:Updated:

நடிகர் போண்டா மணி குடும்பத்தினரை நம்பவைத்து ஏமாற்றிய இளைஞர்! - போலீஸில் சிக்கியது எப்படி?

போண்டா மணி

சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வதுபோல நடித்து, ஒரு லட்சம் ரூபாயை மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

நடிகர் போண்டா மணி குடும்பத்தினரை நம்பவைத்து ஏமாற்றிய இளைஞர்! - போலீஸில் சிக்கியது எப்படி?

சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வதுபோல நடித்து, ஒரு லட்சம் ரூபாயை மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
போண்டா மணி

சென்னை அயயப்பன்தாங்கல், நியூ மாருதி ரியல் எஸ்டேட், ஆயில் மில் வீதி ஏழுமலை சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் காமெடி நடிகர் கேதீஸ்வரன் என்கிற போண்டா மணி. இவரின் மனைவி மாதவி, இவர் 27.9.2022-ம் தேதி சென்னை எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என் கணவர் நடிகர் போண்டாமணி, சில மாதங்களாகச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரைக் கடந்த வாரம் அட்மிட் செய்தோம். கடந்த 25.9.2022-ம் தேதி என் கணவர் மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.

போண்டா மணி
போண்டா மணி

பின்னர் அந்த நபர் என் கணவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். நாங்கள் கேட்கும் உதவிகளைச் செய்துவந்ததால் என் கணவருக்குத் தெரிந்தவர் என்று நாங்கள் அந்த நபரை நம்பிவிட்டோம். இதையடுத்து என் கணவர் நடிகர் போண்டா மணியை 27.9.2022-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அப்போதும் அந்த நபர் கூடவே வந்து உதவிகளைச் செய்தார். என் கணவருக்கு மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கும், அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எடுத்து வருவதாகவும் கூறி ஏ.டி.எம் கார்டை அந்த நபர் வாங்கிச் சென்றார். பின்னர் என் கணவரின் செல்போனுக்கு குறிப்பிட்ட நகைக்கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை எடுத்ததாக ஒரு மெசேஜ் வந்தது.

அதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். உடனே ஏ.டி.எம் கார்டை வாங்கிச் சென்றவரின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. எனவே எங்களை நம்பவைத்து, ஏமாற்றி, மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிந்திரசிங் வழக்கு பதிவுசெய்து போலீஸார் அந்த நபரைத் தேடிவந்தனர். நகைக்கடையின் சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல் அடிப்படையில் அந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராஜேஷ் பிரித்தீவ் எனத் தெரியவந்தது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்மீது ஏற்கெனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராஜேஷ்
ராஜேஷ்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நடிகர் போண்டா மணி உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், அவருக்கு சிலர் உதவிகளைச் செய்தனர். அப்படி உதவி செய்வதைப்போல ராஜேஷ் நடித்து போண்டா மணியின் குடும்பத்தினருடன் நட்பாகப் பழகிவந்திருக்கிறார். அதனால்தான் அவரை நம்பி, போண்டா மணியின் குடும்பத்ததினர் ஏ.டி.எம் கார்டைக் கொடுத்துள்ளனர். ஏ.டி.எம் கார்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணமிருந்ததால் அதை எடுக்க ராஜேஷ் முடிவு செய்து, சென்னை அண்ணாசாலையிலுள்ள நகைக்கடையில் நகைகளை எடுத்திருக்கிறார். அந்த மெசேஜ், நடிகர் போண்டா மணியின் செல்போனுக்குச் சென்ற பிறகே அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. உடனடியாகப் புகாரளித்ததால் ஏ.டி.எம் கார்டை பிளாக் செய்து மேலும் பணம் எடுக்காமல் தடுத்தோம். அதோடு அந்த நபரையும் கைதுசெய்து நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அறிமுகமில்லாதவர்களிடம் ஏ.டி.எம் கார்டைக் கொடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்றனர்.