திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் சகோதரர் அளித்த புகாரை தொடர்ந்து, அவரின் கணவர் மற்றும் மாமியாரை காவல்துறையினர் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வரதட்சணைக் கொடுமையின் காரணமாக அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரியில் உள்ள அரசுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் காயத்ரி. தானம் தாங்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவரும், வரம்பியம் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பார்த்திபன் என்பவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர், காயத்ரியின் உடலைக் கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட காயத்ரியின் உடல், அவரின் குடும்பத்தினரிடன் ஒப்படைக்கப்பட்டது.
காயத்ரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணைக் கொடுமையின் காரணமாகவே அவரின் மரணம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறி, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் பாலத்தில் காய்திரியின் சடலத்துடன், அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை காண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் கழனியப்பன் உள்ளிட்டவர்கள் காயத்ரியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான விசாரணை செய்து, நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, தன் சகோதரி காயத்ரியை, அவரின் கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டவர்கள், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் மன உளைச்சல் அடைந்து தன் சகோதரி தற்கொலை செய்துகொண்டதாகவும், காயத்ரியின் சகோதரர் மகேந்திரன் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தினர், காயத்ரியின் கணவர் பார்த்திபன், பார்த்திபனின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோரைக் கைது செய்தனர். வரதட்சணைக் கொடுமையின் காரணமாக காயத்ரி தற்கொலை செய்துகொண்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.