நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள பாடந்தொரை கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவந்தவர் 30 வயதான சுனில். அரசு வேலை வாங்கித் தருவதாக முப்பதுக்கும் அதிகமான பெண்களிடம் பல ஆயிரம் ரூபாய் ரூபாய் பணத்தை வாங்கியதாக சுனில் மீது காவல்துறையில் பெண்கள் சிலர் புகார் அளித்திருக்கின்றனர். மேலும், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் பெண்கள் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சுனிலிடம் கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெண்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதோடு, போலி பணி நியமன ஆணையை சுனில் வழங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். அதையடுத்து உடனடியாக சுனில் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரைப் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் சுனிலின் மோசடிகள் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா அங்கன்வாடிகளில் பணி வாங்கித் தருவதாகக் கூறி 35 பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றி வாங்கியிருக்கிறார். மேலும், கிராம நிர்வாக அலுவலரின் சீல் வைக்கப்பட்ட பணி நியமன ஆணையையும் இவர் வழங்கியிருக்கிறார். சந்தேகமடைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது சுனில் வழங்கியது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. அதையடுத்து புகாரின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.