Published:Updated:

``நிலநீர் எடுப்பு சான்று வேணும்னா ரூ.50,000 லஞ்சம் கொடு!’’ - நீர்வளத்துறை அதிகாரி சிறையிலடைப்பு

நீர்வளத்துறை அதிகாரி சிறையிலடைப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ‘நிலநீர் எடுப்பு சான்று’ வழங்க 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை, புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்தவர் லியாகத் அலி, வயது 46. இவர், கிரிவலப் பாதையில் ‘சோலா’ என்ற பெயரில் புதிதாகக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கியிருக்கிறார். இதற்குத் தேவையான தண்ணீரை நிலத்தடியிலிருந்து எடுக்க நிலநீர் எடுப்பு சான்று கேட்டு, சென்னை தரமணியிலிருக்கும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் 6,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலை (டிடி) செலுத்தி, கடந்த 15-ம் தேதி விண்ணப்பித்திருக்கிறார்.

``நிலநீர் எடுப்பு சான்று வேணும்னா ரூ.50,000 லஞ்சம் கொடு!’’ - நீர்வளத்துறை அதிகாரி சிறையிலடைப்பு

இது தொடர்பாக, அவரின் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக திருவண்ணாமலை நீர்வளத்துறை அலுவலகத்திலிருந்து உதவி நிலவியலாளர் சிந்தனைவளவன், கடந்த 23-ம் தேதி சென்றிருக்கிறார். ஆய்வின்போது அவர், ‘அனுமதிச் சான்று வேண்டுமெனில் 50,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத லியாகத் அலி, இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, உதவி நிலவியலாளர் சிந்தனைவளவனை நேற்றைய தினம் போனில் தொடர்புகொண்ட லியாகத் அலி, பணம் தருவதாகக் கூறினார். சிந்தனைவளவனும் பணம் வாங்குவதற்காக சுத்திகரிப்பு நிலையத்துக்கு வந்தார். அப்போது, அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லியாகத் அலி கொடுத்தார். சிந்தனைவளவன் அந்தப் பணத்தை கையில் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

சிந்தனைவளவன்
சிந்தனைவளவன்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிந்தனைவளவன் அதிர்ச்சியடைந்து, ‘தயவு செய்து, இந்த ஒருமுறை என்னை விட்டுடுங்க சார்...’ என்று கெஞ்சியிருக்கிறார். ‘வாங்க பேசிக்கிட்டே போகலாம்’ என்று லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அவரை ஆசுவாசப்படுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, நீர்வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நேற்று இரவு சிந்தனைவளவனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.