Published:Updated:

`இந்தி எழுத்துகள் அழிப்பு!’ - குடியாத்தத்தில் மை டப்பாவுடன் சுற்றிய தி.மு.க-வினர் கைது

குடியாத்தம் ரயில் நிலையத்தில், இந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளைக் கறுப்பு மை பூசி அழித்த, தி.மு.க-வினரை போலீஸார் கைதுசெய்தனர்.

போராட்டம் செய்த தி.மு.க-வினர்
போராட்டம் செய்த தி.மு.க-வினர்

‘ஒரே நாடு... ஒரே மொழி’ கொள்கையின் மூலம் இந்தி மொழியை மத்திய பா.ஜ.க அரசு திணிக்கப் பார்ப்பதாக, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. 

அமித் ஷா
அமித் ஷா

தமிழகத்திலும், இந்திக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிவருகிறார்கள். தாய்மொழிக்குப் பின்னரே இந்தி என உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது கருத்து குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தைத் தற்காலிகமாகத் தி.மு.க வாபஸ் வாங்கியிருக்கிறது.

இந்தநிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையத்தில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், இன்று கறுப்பு மை டப்பாவுடன் குவிந்தனர்.

MK Stalin
MK Stalin

ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகையில், இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளைக் கறுப்பு மை பூசி அழித்தனர். தவிர, கறுப்புக்கொடியை கையில் ஏந்தி போராட்டம் செய்தனர்.

‘திணிக்காதே... திணிக்காதே இந்தியைத் திணிக்காதே. அழிப்போம்... அழிப்போம் இந்தி மொழியை அழிப்போம்’’ என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போராட்டம் செய்த தி.மு.க-வினர்
போராட்டம் செய்த தி.மு.க-வினர்

தகவலறிந்துவந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் 22 பேரைக் கைதுசெய்தனர். அவர்களை குடியாத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீஸார் அடைத்துள்ளனர்.