Published:Updated:

”பெத்த மகளுக்கு அஞ்சலி செலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை?”– கொந்தளிக்கும் ஸ்னோலினின் தாயார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்னோலின் கல்லறையில் தாய், தந்தை
ஸ்னோலின் கல்லறையில் தாய், தந்தை

”பெத்த மகளின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்தப் போகணும்னா ஆதார் அட்டைய காட்டச் சொல்றாங்க போலீஸ்காரங்க. அஞ்சலி செலுத்த எதுக்குய்யா ஆதார் கார்டு?” என கொந்தளிக்கிறார் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயது மாணவி ஸ்னோலினின் தயார் வனிதா.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 100 நாள்கள் தொடர் போரட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் பேரணியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில், வாயில் சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள் 17 வயதான 12-ம் வகுப்பு மாணவி ஸ்னோலின். உயிரிழந்த 13 பேரில் இந்த மாணவியின் உயிரிழப்பு கொடூரமானது எனப் பல தலைவர்களும் அரசுக்கு எதிராகக் கொந்தளித்தனர்.

ஸ்னோலின் தாயார் வனிதா
ஸ்னோலின் தாயார் வனிதா

இச்சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று, ஸ்னோலினின் தாயார் வனிதாவைச் சந்தித்தோம். கல்லறைத் தோட்டத்தில் ஸ்னோலினின் கல்லறையில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தவர், “இதே 22-ம் தேதி காலையில வீட்டைவிட்டு 8 மணிக்கு தெருவுல உள்ள மக்களோட கையில கறுப்புக்கொடியை தூக்கிக்கிட்டு “மூடு மூடு ஸ்டெர்லட்டை மூடு, காப்பர் உனக்கா கேன்சர் எனக்கா?”ன்னு கோஷம் எழுப்பிக்கிட்டே ஊர்வலத்துல கலந்துக்கிட்டா ஸ்னோ.

ஊர்வலத்துக்கு கிளம்புறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலகூட, ”கைக்குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரைக்கும் ஒண்ணு சேர்ந்து ஊர்வலத்துல போறோம். மக்கள் சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்த இந்தப் போரட்டத்துல நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்மா. இந்த நாளோட ஸ்டெர்லைட் ஆலைய மூடிடுவாங்கம்மா. நாம இனி நல்லக் காற்றை சுவாசிக்கலாம். இந்தப் போரட்டம் மக்களின் வெற்றிப் போரட்டம்தாம்மா. போராட்டம் முடிஞ்சு வர சாயங்காலம் ஆகலாம்.

ஸ்னோலின் தாயார் வனிதா
ஸ்னோலின் தாயார் வனிதா

எனக்காகக் காத்திருக்காம மதியானம் நீங்க சாப்பிட்டு, மாத்திரை போடுங்க. வெற்றிச் செய்தியோடதான் வீட்டுக்குத் திரும்புவோம்”னு சொல்லிட்டு என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துட்டுப் போனா. நானும் பதிலுக்கு என் தங்கத்தோட கன்னத்துல முத்தம் கொடுத்து அனுப்பிவச்சேன். ஆனா, அதே கன்னத்துல துப்பாக்கியால சுடப்பட்டு இறந்துபோன நிலைமையிலதான் என் செல்ல மகளைப் பார்த்தேன். ஸ்னோகுட்டி இறந்து இன்னையோட ரெண்டு வரு‌ஷம் ஆயிட்டு. அவளை அடக்கம் செஞ்ச கல்லறையில் குடும்பத்தோட வந்து அஞ்சலிசெய்ய திட்டமிட்டிருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்லறைக்குப் போயி அஞ்சலி செலுத்தப் போகணும்னா ஆதார் அட்டைய ஸ்டேஷன்ல காட்டிட்டு போகணும்னு சொன்னாங்க போலீஸ்காரங்க. பெத்த பிள்ளைய அடக்கம் செஞ்ச கல்லறையில கண்ணீர் சிந்தி அஞ்சலிசெலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை? ரெண்டு நாளுக்கு முன்னால இருந்தே எங்க வீடு, கல்லறைத் தோட்டம் அருகில் என போலீஸார் இரவு பகலா கண்காணிச்சுட்டு வர்றாங்க.

”பெத்த மகளுக்கு அஞ்சலி செலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை?”– கொந்தளிக்கும் ஸ்னோலினின் தாயார்!

எங்க குடும்பத்துல யாரு எங்க போனாலும் இப்போ வரைக்கும் பின்தொடர்ந்து வந்து கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. நாங்க என்ன தேசத் துரோகிகளாய்யா? வீட்டுக்கு புதுசா யாராவது வந்தாக்கூட அவங்க யாரு, எங்கிருந்து வர்றாங்க, என்ன விசயமா வந்திருக்காங்கன்னு கேட்டு தொந்தரவு செய்யுறாங்க.

என் மகளை நினைச்சு அழுதாக்கூட சத்தமில்லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு. அவளோட நினைப்பு வரும்போதெல்லாம் கல்லறைக்கு வந்து, மன அமைதிக்காக கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போவேன். இப்போ அதுக்கும் அனுமதியில்லன்னா எப்படி? துப்பாக்கிச்சூடு நடந்து முடிஞ்சு ரெண்ண்டு வருஷம் ஆயிட்டு.

ஸ்னோலின் கல்லறையில் நினைவஞ்சலி
ஸ்னோலின் கல்லறையில் நினைவஞ்சலி

ஆனா, அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரங்க யார் மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இந்தச் சம்பவம் தொடர்பா விசாரணை செய்ய நியமிச்ச ஒருநபர் ஆணையத்தின் விசாரணையும் மந்தமாதான் இருக்கு. என் மகளைச் சேர்த்து, உயிரிழந்த 13 அப்பாவிகளின் உயிருக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகுது?”என்றார் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு