Published:Updated:

ராமநாதபுரம்: `தடுப்பூசி போட சென்றவரை தாக்கிய போலீஸ்!’ - காவல்துறை டிரைவர் மீது நடவடிக்கை

ஊரடங்கு...
ஊரடங்கு...

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் வெளியில் சுற்றுபவர்களை விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்.

கொரோனா தடுப்பூசி போட சென்றவரை காவல்துறை தாக்கிய சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று அரசு காவல்துறையினருக்கு பலமுறை அறிவுறுத்தினாலும் ஊரடங்கு காலத்தில் உத்தரவை மீறி நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்
உ.பாண்டி

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தளர்வில்லாத ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்தியாவசிய பணிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் செல்பவர்கள் காவல்துறையால் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் வெளியில் சுற்றுபவர்களை விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ் ஜீப் டிரைவர் ராஜ்குமார்
போலீஸ் ஜீப் டிரைவர் ராஜ்குமார்

அந்த நேரத்தில் டூவீலரில் சென்ற பிரகாஷ் என்ற இளைஞரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் விசாரித்தபோது, தடுப்பூசி போடச்செல்வதாக கூறியிருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் அருகே நின்றுகொண்டிருந்த டிரைவர் ராஜ்குமார், 'என்னடா ஐயாகிட்டே பொய் சொல்றே..' என்று கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதை இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்த்தாரே தவிர தடுக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனக் கூறப்படுகிறது.

'ஏன் அடிக்கிறீர்கள்...' என்று கேள்வி எழுப்பிய பிரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றும் தாக்கியிருக்கிறார்கள்.

இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரிந்து காவல் நிலையம் வந்தவுடன் அவர்களை சமாதானப்படுத்தி பிரகாஷை அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறைனரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பிரகாஷ், முதல்வரின் தனிப்பிரிவுக்கு உடனே புகார் அளித்துள்ளார்.

காவல்துறை சோதனை
காவல்துறை சோதனை

அராஜகமாக நடந்த கொண்ட ஜீப் டிரைவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த எஸ்.பி, இந்த வன்முறை சம்பவத்தை கண்டுக்கொள்ளாமல் இருந்த நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உட்பட மற்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோல் கடந்த மாதம் கொரோனா பணியிருந்த இளம் டாக்டர்கள் இருவரை பரமக்குடி டி.எஸ்.பி தாக்கியதாக எழுந்த புகாரிலும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், காவல்துறை அத்துமீறல் தொடர்கிறது என்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு