Published:Updated:

`உன்ன யாரு வரச் சொன்னது?’-ஆதரவற்றோருக்கு உணவளிக்க சென்றவரை தாக்கிய போலீஸ்; பேராவூரணி சர்ச்சை

போலீஸ் வாக்குவாதம்
போலீஸ் வாக்குவாதம்

பேராவூரணி பகுதியில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக கடைபிடிக்கப்பட்ட சுய ஊரடங்கால், உணவின்றி சாலையோரத்தில் தவித்தவர்களுக்கு, உணவு வழங்கிய சமூக ஆர்வலரைத் தடுத்த போலீஸார், தாசில்தார் முன்னிலையிலேயே அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவதைத் தடுக்கும் விதமாக மக்களுக்கு சுய ஊரடங்கு கடைபிடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. ஹோட்டல்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பேராவூரணி பஸ் ஸ்டாண்டு மற்றும் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்கள் உணவின்றித் தவித்தனர்.

உணவு
உணவு

இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரும், சமூக ஆர்வலருமான உதயகுமார், ஆதரவற்றவர்களுக்குக் கொடுத்து உதவ நினைத்தார். இதற்காகத் தனது வீட்டில் உணவு தயார்செய்து, பொட்டலமாகக் கட்டி எடுத்துக்கொண்டு, தன் நண்பருடன் சென்று சாலையோரத்தில் இருந்த ஆதரவற்ற முதியோர்களுக்குக் கொடுத்தார். அதன் பின்னர், பேருந்து நிலையத்தில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அண்ணா சிலை அருகே நின்ற போலீஸார், உதயகுமாரை வழிமறித்து, `ஏன் வெளியில் வர்றீங்க வெளியே வர தடை போட்டிருப்பது தெரியாதா? என கேட்க, உதயகுமார் விஷயத்தைச் சொல்லியுள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அதே இடத்தில் இருந்த தாசில்தார் ஜெயலெட்சுமி முன்னிலையிலேயே உதயகுமாரை தாக்கியுள்ள்னர்.

சமூக ஆர்வலர்
சமூக ஆர்வலர்

இதுகுறித்து உதயகுமார், ``சாலையோரத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக உணவுப் பொட்டலங்களுடன் சென்ற என்னையும், என் நண்பரையும் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீஸார் வழிமறித்தனர். உடனே திருநாவுக்கரசர், உன்னை யார் வெளியில் வரச் சொன்னது?’ என எடுத்த எடுப்பிலேயே ஏக வசனத்தில் பேச, பசியால் வாடுபவர்களுக்கு சாப்பாடு கொடுக்கச் செல்கிறேன் சார்’ என நான் சொன்னேன். `நீ என்ன அரசாங்கமா?’ எனக் கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் பேசினார். `என்ன சார் இப்படி பேசுறீங்க’ என கேட்க, போலீஸ் கிட்டயே வாக்கு வாதம் செய்றியா எனக் கூறி, `உன் லைசென்ஸ் எங்கே... இன்சூரன்ஸை எடு’ என்று கேட்டு, வண்டி சாவியைப் பிடுங்கிக்கொண்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே, அருகில் இருந்த தாசில்தாரிடம் சென்று நான் முறையிட்டதற்கு அவர், "144 தடை உத்தரவு போட்டு இருக்கும்போது, நீ எதற்கு வெளியில் வந்தாய்" என்றார். இதையடுத்து நான் கிளம்ப, எஸ்ஐ திருநாவுக்கரசர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். `என்னை ஏன் சார் அடிச்சீங்க... அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது?’ என கேட்கவும் அருகிலிருந்த போலீஸ்காரர், ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கவனிப்போம் என்றார். இக்கட்டான இந்த நேரத்தில், உதவ ஆள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ததை சமூக விரோத செயலை செய்தது போல் தடுத்து போலீஸார் நடந்துகொண்ட விதம் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதேபோல், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் செய்தி எடுக்கவும் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இது தொடர்பாக தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் பேசினோம், ``சாப்பாடு கொடுப்பதுபோல், ஆதரவற்றர்கள் யாரும் இல்லாத போது சாப்பாடு கொடுக்க செல்வதாகக் கூறினார். அப்போது, போலீஸாருக்கும் அந்தப் பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை” என்றார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை உதயகுமார் வீட்டுக்குச் சென்ற அருண்குமார் என்ற எஸ்ஐ, உதயகுமாரையும் சம்பவத்தின்போது செல்போனில் வீடியோ எடுத்த விஜய்யையும் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

`சமூக ஆர்வலரான உதயகுமாரை போலீஸார் பழிவாங்கும் நோக்கத்தோடு, போலீஸ் பற்றி அவதூறு பரப்பியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். மாஸ்க் அணிந்து செயல்படுங்கள் என சொல்லியிருக்கலாம். அல்லது அனுமதி மறுத்திருக்கலாம்.. ஆனால் கைது வரைச் செல்வது, கண்டிக்கத் தக்கது” என அப்பகுதியினர் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு