Published:Updated:

`லத்தியால் ஈவு இரக்கம் இல்லாமல் அடிக்கிறார்கள்!' -போலீஸ் குறித்து சேலம் தொழிலாளி வேதனை

ஊரடங்கு
ஊரடங்கு ( க. தனசேகரன் )

சேலம் மாவட்ட கிராமப்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தால்கூட காவல்துறையினர் தாக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

''எங்க வீட்டுல கிரைண்டர் கிடையாது. வீட்டுலயிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மூலக்கடைக்கு வந்து, 4 கிலோ அரிசி அரைச்சுக்கிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டிருந்தேன். அப்போ, பூலாம்பட்டி காவல் நிலையத்துல இருந்து வாகனத்துல வந்த போலீஸார் '144 தடை இருக்கு, வெளியில் சுற்றிட்டு இருக்கிறீயா'னு சொல்லி லத்தியால ஈவு இரக்கம் இல்லாமல் அடிச்சாங்க'' என்று புலம்புகிறார், சேலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகி தீவிரமடைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் கடந்த 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுவருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வந்து தேவையான பொருள்களை பெற்றுச்செல்லலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், சேலம் மாவட்ட கிராமப்புறங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்தால்கூட காவல்துறையினர் தாக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

இதுபற்றி இருப்பாளியைச் சேர்ந்த கோவிந்தராஜ், ''நான் கூரியர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். அதில் கிடைக்கும் சொற்ப மாத வருமானத்தை நம்பிதான் என் வாழ்க்கையே இருக்கு. இந்த மாதச் சம்பளம் தாமதமாகவும், குறைவாகவும் கிடைப்பதால் எங்க வாழ்க்கை பெரும் திண்டாட்டமாக இருக்கும். இருந்த போதும் கொரோனா வைரஸின் கொடூரத்தை தொலைக்காட்சி மூலமாகவும், செய்தித்தாள்கள் மூலமாகவும் பார்த்ததால் அரசு எடுத்திருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவை வரவேற்பதோடு, முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறேன்.

எங்க வீட்டில் கிரைண்டர் கிடையாது. வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மூலக்கடைக்கு வந்து 4 கிலோ அரிசி அரைத்துவிட்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தேன். அப்போது பூலாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த போலீஸார் '144 தடை இருக்கு, வெளியில் சுற்றிட்டு இருக்கிறீயா'னு சொல்லி லத்தியால் ஈவு இரக்கம் இல்லாமல் அடித்தார்கள். என் கையெல்லாம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைக்கு போகக்கூட வசதியில்லை'' என்றார்.

தீபா கனிக்கர்
தீபா கனிக்கர்

இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர், ''சேலம் மாவட்ட காவல்துறையினர் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் நபர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கக்கூடாது. அவர்களிடம் சரியான காரணங்களோ, ஆதாரமோ இருந்தால் உடனே அவர்களை அனுப்பிவிட வேண்டும். அவர்களைக் காக்க வைக்கவோ, தண்டிக்கவோ கூடாது. மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதை அனைத்து காவல்துறை அலுவலகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்புகிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு