Published:Updated:

மாநில எல்லைகளில் இரவு நேர செக் அப் எப்படி நடக்கிறது... ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்! #Corona

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக - ஆந்திரா எல்லையில் கண்காணிப்புகள் தீவிரமாக இருந்து வருகின்றன.

கொரோனா நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அனைத்து மாநிலங்களின் எல்லைகளையும் முடக்க உத்தரவிட்டது. இதனால் மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

இந்த நிலையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி தற்போது எப்படி இருக்கிறது, அங்கு என்ன மாதிரியான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு ஒரு ஸ்பாட் விசிட் அடித்தோம்.

கும்மிடிப்பூண்டி, திருத்தணி என ஆந்திராவிலிருந்து தமிழ்நாடு வருவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. நாங்கள் கும்மிடிப்பூண்டியையொட்டிய தமிழக- ஆந்திரா எல்லைப் பகுதிக்குச் சென்றிருந்தோம். சென்றது இரவு நேரம் என்பதால் சாலைகள் வழிநெடுகிலும் வெறிச்சோடிக் காணப்பட்டன. செல்லும் வழியில் அமைந்திருந்த சோழவரம் சுங்கச் சாவடி ஒரு வாகனம் கூட இல்லாமல் இருந்தது . மாதர்பாக்கம் கூட்டு ரோடு எல்லைச் சாலை, ஆரூர் ஆந்திரா - தமிழ்நாடு பார்டர் பகுதி மற்றும் எளாவூர் சோதனைச் சாவடி எனக் கும்மிடிப்பூண்டிப் பகுதியைச் சுற்றி மொத்தம் மூன்று தமிழ்நாடு-ஆந்திரா எல்லை சோதனைச் சாவடிகள் உள்ளன.

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

இந்த மூன்று சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் மிகுதியாக வந்து செல்லும் எளாவூர் மாநில சோதனைச் சாவடிக்கு முதலில் சென்றோம். மாநில எல்லைப் பகுதி என்பதால் எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் அந்தச் சோதனைச் சாவடி, தற்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் வழக்கமான அளவை விடக் குறைவாக இருந்தன. இந்தச் சோதனைச் சாவடியின் நுழைவு வாயிலுக்கு 100 மீட்டர்கள் முன்பாகவே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு காவல் துறையினரால் சோதனை செய்யப்படுகின்றன. அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர்த்து மற்ற கார்கள், லாரிகள், தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் காவல் துறையினரால் திருப்பி விடப்படுகின்றன.

அந்த சோதனைச் சாவடி தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு ஆந்திர மாநிலக் காவல் துறையினரோ அதிகாரிகளோ யாரும் இல்லை. சோதனைப் பணியில் 30-க்கும் மேற்பட்ட தமிழகக் காவல் துறையினரும், 6 மாநில நோய்த் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், 2 மருத்துவர்கள், 2 வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் 2 கிராம அலுவலர்களும் மாவட்ட மருத்துவ அலுவலர் அனுரத்னா தலைமையில் சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

அந்த சோதனைச் சாவடி வழியாகக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் மருத்துவ அலுவலர் மேற்பார்வையின் கீழ் முழுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதன்படி, மாநில நோய்த் தடுப்பு அதிகாரிகளால் வாகனங்களுக்குக் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, ஓட்டுநர்களின் உடல் வெப்பத்தைக் கருவிகள் கொண்டு பரிசோதித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் வாகனத்தின் பதிவு எண்களைப் பதிவேட்டில் பதிவுசெய்து கொண்ட பின்னரே, தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் எளாவூர் மாநில எல்லை சோதனைச் சாவடி வழியாக மட்டுமே பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுலிருந்தும் ஆந்திரா மற்றும் கொல்கத்தா போன்ற மாநிலங்களுக்குச் செல்ல முடியும்.

அதே போல் மற்ற இரண்டு எல்லைச் சோதனைச் சாவடிகளான மாதர்பாக்கம் கூட்டு ரோடு மற்றும் ஆரூர் எல்லைச் சாலை ஆகிய இரண்டும் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாதர்பாக்கம் கூட்டு ரோடு எல்லைப் பகுதி தமிழ்நாட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கும் தமிழகக் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளே சோதனைப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆரூர் எல்லைப் பகுதியில், ஆந்திரக் காவல் துறையினரும் சேர்ந்து சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அங்கு தமிழகக் காவல் துறையினர் இரண்டு பேர், மாநில நோய்த் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் இருந்தனர். அந்தப் பகுதி வழியாகப் பெரும்பாலும், ஆந்திரக் கிராமங்களிலிருந்து தர்பூசணி மற்றும் தக்காளி போன்றவற்றை ஏற்றிக்கொண்டு லாரிகள் தமிழகத்துக்கு வந்தன.

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

இந்த மூன்று எல்லைப் பகுதிகளுக்கும், இரவு நேரத் தலைமைப் பொறுப்பாளராக இருந்து வரும் மருத்துவ அலுவலர் அனுரத்னாவிடம் பேசினோம்.

"நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர். பகல் நேரத்தில் மருத்துவமனைப் பணிகளைப் பார்க்கிறேன். இரவு நேரத்தில், மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, சோதனைச் சாவடிகளில் நடைபெற்று வரும் சோதனைப் பணிகளைக் கண்காணித்து வருகிறேன். அரசின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் எதையும் இங்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி. அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்களை மட்டுமே முறையான பரிசோதனைகள் செய்து தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கிறோம்.

உங்கள் மன்னிப்பு அங்கே நடந்துகொண்டிருக்கும் சகோதரர்களுக்கு எட்டியிருக்காது பிரதமர் அவர்களே!

இதுவரை ஆந்திர மாநிலத்திருந்து கொரோனா நோய்த் தொற்றுடன் யாரும் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை. சோதனையில் யாருக்காவது உடல் வெப்பம் அதிகமாகவோ அல்லது சிறு காய்ச்சலோ இருந்தால் கூட நாங்கள் உடனடியாகப் பரிசோதிக்கிறோம். அதே போல, சிங்கப்பூரிலிருந்து இந்த சோதனைச் சாவடி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்த சிலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாத போதிலும், மாவட்ட சுகாதாரத் துறையினர் மூலம் அவர்களையும், அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தித் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ஆந்திரா எல்லை
ஆந்திரா எல்லை

இந்த வழியே கடந்து செல்லும் எல்லா வாகனங்களையும் முறையாகப் பரிசோதித்து, அதன் எண்களைப் பதிவு செய்த பின்னரே அனுமதிக்கிறோம். நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் திறம்படச் செயல்பட்டு வருகிறோம். எங்களைப் பொறுத்தவரையில் ஆந்திராவிலிருந்து எந்த நபரும் கொரோனா நோய்த் தொற்றுடன் தமிழ்நாட்டிற்கு வந்து விடக் கூடாது. அதே போல் இங்கிருந்தும் யாரும் அந்த மாநிலத்துக்கு நோய்த் தொற்றுடன் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு