Published:Updated:

ஆட்டோ உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, தாக்குதல்... என்ன நடக்கிறது கோவையில்?

கோவை
கோவை

`கோவையில் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வலுத்து வந்தன. இதனிடையே, இந்து முன்னணி மதுக்கரை ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் என்பவர் மீது கடந்த வாரம் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆனந்தன்
ஆனந்தன்

இதையடுத்து, அன்றைய தினம் கோவை அரசு மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த இஸ்லாமியர்களின் ஆட்டோக்களை இந்து அமைப்பினர் அடித்து நொறுக்கியதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டது. மேலும், கணபதி அருகே உள்ள பள்ளி வாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர்.

ஆனந்தன் மீதான தாக்குதலைக் கண்டித்து கடந்த 7-ம் தேதி பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்பினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அன்றைய தினமே இஸ்லாமிய அமைப்புகள் சார்பாகவும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனிடையே, 8-ம் தேதி ராஜவீதியில் வி.ஹெச்.பி பிரமுகரின் ஆட்டோவை மர்மநபர்கள் தாக்கினர்.

ஆட்டோ உடைப்பு
ஆட்டோ உடைப்பு

இதையடுத்து, 9-ம் தேதி செல்வபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகரின் ஆட்டோ மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.

இந்நிலையில், குனியமுத்தூர் பகுதியில் பி.ஜே.பி அமைப்பு சாரா தொழிற்சங்கத் தலைவர் கார்த்தியின் ஆட்டோவை மர்மநபர்கள் இன்று காலை தாக்கிச் சென்றனர். அதேபோல, காட்டூரில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.

இந்து முன்னணி அலுவலகம் பெட்ரோல் குண்டு
இந்து முன்னணி அலுவலகம் பெட்ரோல் குண்டு

இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சி அடங்குவதற்குள், எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மாவட்டச் செயலாளர் இக்பால் மீது மர்மநபர்கள் இன்று மதியம் தாக்கியுள்ளனர். இக்பால் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, இந்து முன்னணி அலுவலகத்தின் மீதான பெட்ரோல் குண்டு வீச்சைக் கண்டித்து, நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த சம்பவங்களால் கோவையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், கோவையின் முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இக்பால்
இக்பால்

கடந்த வாரம் கணபதி பள்ளி வாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில். வி.ஹெச்-பி-யைச் சேர்ந்த அகில் மற்றும் பி.ஜே.பி- யைச் சேர்ந்த பாண்டி என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை போலீஸ் துணை ஆணையர் பாலாஜி சரவணன், ``தனிமனிதர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல், தங்களது பணிகளைத் தொடரலாம்.

கோவை
கோவை

எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதற்கு காவல்துறை மூலம் தீர்வு காண்பதே சரியான வழி. மத ரீதியாகப் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். பாதுகாப்புப் பணிகளில் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என்றார். இதுதொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். நகரில் அமைதி திரும்ப இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். இந்தநிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக உக்கடத்தில் மாலை 6 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு