Published:Updated:

மதுரை: ``என் வாழ்க்கை முடிந்துவிட்டது; மற்ற பெண்களைக் காப்பாற்றுங்கள்!’’ - காவலரின் மனைவி கண்ணீர்!

பாலியல் மோசடி
பாலியல் மோசடி ( மாதிரி படம் )

புகார் எழுப்பும் போலீஸ்காரரின் மனைவி! - தாமதமாகும் நடவடிக்கை..!

``இணையதளத்தில் போலிக் கணக்குகளைத் தொடங்கி, பல பெண்களிடன் நட்புடன் பேசிப் பழகிய பிறகு, அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார் என் கணவர். அவர்களின் அந்தரங்கப் படங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியும்வருகிறார். தற்போது என்னையும் சித்ரவதை செய்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்; அவர் மொபைலை ஆய்வு செய்யுங்கள். பல உண்மைகள் தெரியவரும்" என்று போலீஸ்காரர் ஒருவரின் மனைவியே, மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

காவலர்  முத்துசங்கு
காவலர் முத்துசங்கு

மதுரை மாநகரத்தில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து சென்று பிடிக்க உருவாக்கப்பட்டதுதான், டெல்டா அதிரடிப்படை. அதில் காவலராகப் பணியாற்றுகிறவர், முத்து சங்கு. இவர்மீதுதான் இவர் மனைவி சுபாஷினி இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். தற்போது காவல்துறையினரின் விசாரணை வளையத்தில் இருக்கும் இவருடைய மொபைல்போனை, சைபர் க்ரைம் பிரிவினர் ஆய்வு செய்துவரும் நிலையில், ``அதில் அதிர்ச்சியான தகவல்கள் நிறைந்துள்ளன. திருமணம் ஆன, ஆகாத பெண்களுடன் பாலியல் சாட்டிங்கும், அவர்களின் அந்தரங்கப் படங்களையும் சேமித்துவைத்திருக்கிறார்" என்கிறார் சுபாஷினி.

புகார் கொடுத்த சுபாஷினியிடம் பேசினோம். ``நான் பி.இ படித்திருக்கிறேன். எனக்கும் முத்து சங்குவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. அப்போதே, தான் எஸ்.ஐ-யாக இருப்பதாகப் பொய் சொல்லித்தான் என்னைத் திருமணம் செய்தார். அதற்காகத்தான் 25 பவுன் நகையும், 1,30,000 ரூபாய் வரதட்சணையும் என் வீட்டில் கொடுத்தனர். ஆனால், அவர் எஸ்.ஐ இல்லையென்பது திருமணத்துக்கு பின்புதான் தெரிந்தது. அப்போதே அவர் மீது சந்தேகம் வந்தது. சென்னை ஆயுதப்படையில் அவர் பணியாற்றியபோது, அப்போதைய அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்குச் சென்றிருக்கிறார். அதைவைத்து, ``எனக்கு அமைச்சர் ரொம்ப நெருக்கம்" என்று சொல்லி, எங்கள் குடும்பத்தினரை மிரட்டுவார். மதுரைக்கு மாற்றலாகி வந்த பின்பு கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல், எப்பவும் என்னைச் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். என்னோடு என் உறவினர்கள் போன்செய்து பேசினால்கூட, ``யார் அது" என்று கேட்டு அசிங்கமாகப் பேசுவார். பலநாள் வெளியூர் டூட்டி என்று போய்விடுவார். வீட்டில் இருக்கும்போது எப்போது பார்த்தாலும் போனில்தான் இருப்பார். சில பேரிடம் விடாமல் பேசிக்கொண்டிருப்பார். ``என் அக்கவுன்ட்டுக்குப் பணம் போட்டுவிடு" என்பார். இதனால் அவர் நடவடிக்கை மீது எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.

 பாலியல் மோசடி
பாலியல் மோசடி

வரதட்சணை கேட்டு, தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்ததால், தாங்க முடியாமல் கடந்த வருடம் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். தான் அமைச்சருக்குப் பாதுகாப்புக்குச் செல்பவன் என என்னென்னவோ சொல்லி, அவர் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அதிகாரிகளை அமுக்கிவிட்டார். ``ஆதாரம் இல்லாமல் ஒண்ணும் பண்ண முடியாது" என்று போலீஸ் ஸ்டேஷனில் சொன்னார்கள். `இவரோடு இனி வாழ முடியாது' என்று இருந்தநிலையில், அவர் இரண்டு குடும்பங்களிலும் உள்ள பெரியவர்களிமுடம், ``இனிமேல் நல்லபடியாகவைத்து வாழ்வேன்" எனச் சொன்னார். அதோடு அதை மறந்துவிட்டு மீண்டும் அவரோடு வாழப்போனேன்.

ஆனால், அதற்குப் பின்பும் அவர் திருந்தவில்லை. மிக மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். என் உடலில் சூடுவைத்து கொடுமைப்படுத்தினார். ``என்னை ஒண்ணும் பண்ண முடியாது. நீ மறுபடியும் என்னைப் பற்றி புகார் செய்தால், என்னோடு நீ இருந்த படங்களை மார்ஃபிங் செய்து நெட்டில் போடுவேன்’’ என்று மிரட்ட ஆரம்பித்தார். இதனால் அவரை எதிர்க்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அப்படி நம் படங்களை மொபைலில் வைத்திருந்தால், அதை அழித்துவிடுவோம் என்று, அவர் அசந்த நேரம் அவரது மொபைலை எடுத்து செக் செய்தேன். அப்போதுதான் அவர், போலியான பல ஐடி-களை உருவாக்கி, பல பெண்களுடன் சாட் செய்ததும், பல பெண்களின் அந்தரங்கமான படங்களை வைத்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியானேன்.

பாலியல் மோசடி
பாலியல் மோசடி
மாதிரி படம்

இதில் பல பெண்களிடம் மோசமாகப் பேசி அவர்களைத் தன் வசப்படுத்தியுள்ளார். சில பெண்களை நேரில் பார்க்கச் சென்றிருக்கிறார். அவர்களுடன் எடுத்த படங்களை நெட்டில் போட்டுவிடுவேன் என்று மிரட்டிப் பணம் கேட்டுள்ளதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படியேவிட்டால், பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிடுவார்.

அதனால், என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. இவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அவருடைய மொபைலிலுள்ள ஆதாரங்களையும் கொடுத்தேன். அவரிடம் சரியாக விசாரணை செய்தால், எத்தனை பெண்களை ஏமாற்றினார் என்பது தெரியவரும். கமிஷனர் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் '' என்றார் அழுதபடி.

பிரேம் ஆனந்த் சின்ஹா.ஐ.பி.எஸ்
பிரேம் ஆனந்த் சின்ஹா.ஐ.பி.எஸ்

இது பற்றி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் பேசினோம். ''தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. அவருடைய கால் லிஸ்ட்டை ஆய்வு செய்துவருகிறார்கள். அவர் மனைவிக்கும் அவருக்கும் ஏற்கெனவே பிரச்னை உள்ளது. ஆனாலும், அவர் மனைவியின் புகார் முழுமையாக விசாரிக்கப்படும். அவர்மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால், உடனே நடவடிக்கை எடுப்போம். விசாரணை அதிகாரிகள் அறிக்கை தந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு