Published:Updated:

ஆசைக்கு இணங்க மறுத்த திருமணமான பெண்; கட்டிவைத்து எரித்த ஜவுளி வியாபாரி - வேலூர் கொடூரம்!

வேலூர்

தன்னுடனான தவறான உறவைத் துண்டித்துக்கொள்ள நினைத்த திருமணமான பெண்ணை, கட்டிலில் கட்டிவைத்து தீயைப் பற்றவைத்துக் கொலைசெய்திருக்கிறார் ஜவுளி வியாபாரி ஒருவர்.

ஆசைக்கு இணங்க மறுத்த திருமணமான பெண்; கட்டிவைத்து எரித்த ஜவுளி வியாபாரி - வேலூர் கொடூரம்!

தன்னுடனான தவறான உறவைத் துண்டித்துக்கொள்ள நினைத்த திருமணமான பெண்ணை, கட்டிலில் கட்டிவைத்து தீயைப் பற்றவைத்துக் கொலைசெய்திருக்கிறார் ஜவுளி வியாபாரி ஒருவர்.

Published:Updated:
வேலூர்

வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் வசித்துவந்தவர் ரமா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), வயது 35. இவருக்குத் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கணவர் கூலி வேலை செய்துவருகிறார்; மகள்கள் பள்ளியில் படிக்கிறார்கள். ரமாவின் சொந்த ஊர் குடியாத்தம் எனச் சொல்லப்படுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்று வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த தனக்கு அறிமுகமான ரமேஷ் என்ற 42 வயதாகும் நபருடன் அவருக்குத் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டிருக்கிறது. ரமேஷுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் சொல்லப்படுகிறது. பாத்திர விற்பனை மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வந்த ரமேஷ், ரமா உடனான உறவால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முள்ளிப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கிவிட்டார். கணவன் வேலைக்குச் சென்ற பின்னர் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ரகசியமாக ரமேஷைச் சந்திப்பதற்காக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ரமா சென்று வந்திருக்கிறார்.

வேலூர்
வேலூர்

இருவரும் அடிக்கடி அந்தரங்க உறவில் இருந்திருக்கிறார்கள். உறவில் ஈடுபடுவதை ரமாவுக்கே தெரியாமல், தன் செல்போனில் ரகசியமாக வீடியோவாகப் பதிவுசெய்தும் வந்திருக்கிறார் ரமேஷ். இதற்கிடையே, இவர்களின் உறவு குறித்து ரமாவின் கணவருக்குத் தெரியவந்திருக்கிறது. மனைவியை அவர் கண்டித்திருக்கிறார். இதையடுத்து, ரமேஷுடன் நெருக்கமாக இருப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியிருக்கிறார் ரமா. அந்தரங்க உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியதால், ஆத்திரமடைந்த ரமேஷ் தன் செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த அந்தரங்க வீடியோ காட்சிகளைக் காண்பித்து, மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து அவரின் ஆசைக்கு இணங்கவேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் ரமா. நேற்று காலை ரமாவின் கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார். மகள்களும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

இதையறிந்த ரமேஷ், ரமாவைத் தன் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அவரும் வேறு வழி தெரியாமல் அங்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்தரங்க வீடியோ காட்சிகளை அழிக்கச் சொல்லி ரமேஷிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அழிக்க மறுத்த ரமேஷ், ரமாவைத் தாக்கி, கட்டிலில் தள்ளிவிட்டு, கை கால்களை கட்டியிருக்கிறார். பின்னர், அவருடன் நெருக்கமாக இருக்க முயன்றபோது, அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற ரமேஷ் தன் வீட்டு அறையிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து ரமாமீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். தீ மளமளவெனப் பரவியதில், வீட்டுக்குள் இருந்த பெட்ரோல் நிரப்பிய கேனும் வெடித்து சிதறியது. இதில், ரமேஷின் உடலிலும் தீப்பற்றியது. இருவரும் அலறித் துடித்தனர். ரமேஷ் கதவைத் திறந்து வெளியே ஓடிவந்து, வீட்டுக்கு அருகிலிருந்த கால்வாய்க்குள் குதித்திருக்கிறார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

பின்னர், ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்குச் செல்ல முயன்றார். உடலில் எரிச்சல் தாங்க முடியாததால், கோட்டையைச் சுற்றியுள்ள அகழி தண்ணீரில் குதித்திருக்கிறார். புகை மூட்டமான வீட்டுக்குள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்ததால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து, பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ரமாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல, அகழியில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்த ரமேஷையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் ரமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரமேஷ் 40 சதவிகித தீக்காயங்களோடு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். வடக்குக் காவல் நிலைய போலீஸார், ரமேஷ்மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியே களேபரமாகக் காட்சியளித்தது.