Published:Updated:

தஞ்சாவூர்: டாஸ்மாக் கடைக்கு சீல்; அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்ட இடம்
மாநகராட்சி சார்பில் ஆய்வு செய்யப்பட்ட இடம்

அறிஞர் அண்ணாவுக்குப் பட்டம் கொடுக்கப்பட்ட இடத்தில், பல வருடங்களாக டாஸ்மாக் கடை நடத்தி கோடிகளில் வருமானம் பார்க்கின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூரில் கொரோனா வார்டு அமைக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக தனியாரிடமுள்ள, மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது முன்னாள் தி.மு.க கவுன்சிலர் ஒருவர் கூடுதல் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை
சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை சிலர் 99 வருடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடை, கிளப் போன்றவற்றை நடத்திவருகின்றனர். தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட அரசு அலுவர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்களுக்காக வார்டு அமைக்க அந்த இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது இராமநாதன் சபாவில் நடத்தப்பட்டுவரும் தனியார் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தனர். இதில் உரிய அனுமதியில்லாமல் டாஸ்மாக் பார் நடத்திவருவது தெரிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

இதில் ஆர்.கே.ராமநாதன் சகோதரர்கள் இராமநாதன் சபாவை குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடையும் பாரும் நடத்திவருகின்றனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடையை நடத்திவருவதாக கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அப்போது `ஆர்.கே.குரூப்ஸ்’ என அழைக்கப்படும் சகோதரர்களில் ஒருவரான ஆர்.கே.நாகராஜ் அந்த இடத்துக்கு வந்தார். அவர் தி.மு.க-வில் முன்னாள் கவுன்சிலர்; தற்போது வார்டு செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் : ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்!
டாஸ்மாக் கடை மற்றும் பார்
டாஸ்மாக் கடை மற்றும் பார்

நாகராஜ், ``என்ன சார், சீல்வெச்சீங்கன்னா என்னால உடைக்க முடியாதா..." எனக் கூடுதல் கலெக்டரிடம் கேட்டிருக்கிறா. இதைக் காதில் வாங்கிக்கொள்ளாத அதிகாரிகள் சீல் வைக்க வலியுறுத்த, சீல் வைக்கப்பட்டது. உடனே, ``டேய், அந்த சீலை உடைங்கடா" என அதிகாரிகளை மிரட்டுவதுபோல் கத்தியிருக்கிறார் என்கின்றனர். மேலும், ``சார், முதல்ல இது என்ன ஊர்னு தெரிஞ்சுக்கங்க. இதுபோல பல அதிகாரிகளை நாங்க பார்த்துட்டோம்" எனவும் மிரட்டினார் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாகராஜ் மீது புகார் செய்யப்பட்டது. பின்னர் அவர்மீது அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரிகள் தரப்பில் பேசினோம். " நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் 4 ஏக்கர் இடத்தை மாத வாடகை ரூ 480 வீதம் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர் ஆர்.கே.ராமநாதன் சகோதரர்கள். இதேபோல் கிளப் ஒன்றையு, லாட்ஜ் ஒன்றையும் வேறு சிலர் எடுத்துள்ளனர். கொரோனா கட்டுப்படுத்துதல் பணிக்காக அந்த இடங்களை பயன்படுத்த ஆய்வு செய்தோம். அப்போது திமுக பிரமுகரான நாகராஜ் எங்களை பயமுறுத்தி மிரட்டினார்.

அது ஒருபுறம் இருந்தாலும், கோடிக்கணக்கில் மதிப்புடைய இடத்தை சொற்ப வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் மூலம் வருடத்துக்கு சுமார் ரூ 5,000 மட்டுமே மாநகராட்சிக்கு வருமானம் வருகிறது. ஆனால் அவர்கள் அதே இடத்தில் கடைகள் கட்டி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டுள்ளனர். வேறு எந்த ஊரிலும் இதுபோல நடந்து பார்த்ததில்லை. மாநகராட்சி போதிய வருவாய் இன்றி தவித்துவரும் நிலையில் இது போன்ற இடங்களைக் கையக்கப்படுத்த நினைக்கிறோம். ஊரிலுள்ள மக்களுக்காகத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள் அந்த ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் பல தடைகளைத் தாண்டி செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறோம். மேலும் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட அறிஞர்கள் நாடகம் நடத்திய, நாடகத்தை கண்டுகளித்த இடம் என்பதால் இந்த இடத்துக்குத் தனிச்சிறப்புண்டு.

சபாவில் ஆய்வு செய்த அதிகாரிகள்
சபாவில் ஆய்வு செய்த அதிகாரிகள்

தி.மு.க., அ.தி.மு.க என எந்தக் கட்சியாக இருந்தாலும் அதிகார பலத்துடன் அவர்கள் கோலோச்சி வருவதுதான் வேடிக்கை. தி.மு.க ஆட்சியிலாவது அந்த இடங்கள் மீட்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். ஆர்.கே.ராமநாதன் சகோதரர்கள் தரப்பில், இவை அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு