Published:Updated:

`குடிகார கணவர்; குழந்தைகளின் பசி!’- ராமநாதபுரத்தில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு உதவிய காவல்துறை

போலீஸார் மீட்ட பெண் மற்றும் குழந்தைகள்!
போலீஸார் மீட்ட பெண் மற்றும் குழந்தைகள்! ( உ.பாண்டி )

குழந்தைகள் கடத்திவரப்பட்டு பிச்சை எடுப்புக்கு பயன்படுத்தப்பட்டிருப்பார்களோ என்ற நோக்கில் முத்துலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

கணவனின் குடிப்பழக்கத்தினால் தாக்குதலுக்கு உள்ளான பெண் தன் 3 குழந்தைகளைக் காப்பாற்ற வழியின்றி ராமேஸ்வரத்தில் பிச்சை எடுப்பில் ஈடுபட்டார். இதை அறிந்த குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் அவர்களை மீட்டு குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குற்றப்பிரிவு போலீஸ் மீட்ட பெண் மற்றும் குழந்தைகள்.
குற்றப்பிரிவு போலீஸ் மீட்ட பெண் மற்றும் குழந்தைகள்.
உ.பாண்டி

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெடல் நகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி. இவரின் கணவர் சாமிக்கண்ணு. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சாமிக்கண்ணு தான் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்துக்குக் கொடுக்காமல் மது குடிப்பதற்கு மட்டுமே செலவழித்துள்ளார். இதனால் குழந்தைகளின் பசியைப் போக்க, பணம் கொடுக்குமாறு கணவர் சாமிக்கண்ணுவிடம் மனைவி முத்துலெட்சுமி கேட்டுள்ளார்.

குடி போதை
குடி போதை
Representational Image

ஆனால், போதையின் பிடியில் சிக்கியிருந்த சாமிக்கண்ணுவுக்கு தன் மனைவி மற்றும் குழந்தைகளின் பசி குறித்து அக்கறையின்றி இருந்ததுடன், பசியைப் போக்க பணம் கேட்ட மனைவி முத்துலெட்சுமியைக் கொடூரமாக தாக்கியும் உள்ளார். சாமிக்கண்ணுவின் கொடூரங்களுக்கு அவரின் குழந்தைகளும் தப்பவில்லை. குடிபோதையில் தன் குழந்தை என்றுகூட பாராமல் அவர்களைக் கடித்துள்ளார். இதனால் அக்குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

இதனால் குடிகார கணவனிடம் இருந்து தன்னையும், குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள முடிவு செய்த முத்துலெட்சுமி, தன் 3 குழந்தைகளுடன் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்துள்ளார். ராமேஸ்வரம் வந்த முத்துலெட்சுமி கையில் இருந்த கொஞ்ச பணமும் செலவாகிவிட குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்துள்ளார். இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

பிறப்புச் சான்றிதழ்
பிறப்புச் சான்றிதழ்
உ.பாண்டி

இதை அப்பகுதியில் பணியில் இருந்த குற்றப்பிரிவு போலீஸார் கண்டனர். குழந்தைகள் கடத்திவரப்பட்டு பிச்சை எடுப்புக்கு பயன்படுத்தப்பட்டிருப்பார்களோ என்ற நோக்கில் முத்துலெட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துலெட்சுமி தன் கணவரால் நேர்ந்த கொடுமை குறித்தும், தன்னுடன் உள்ள குழந்தைகள் மூன்றும் தன் குழந்தைகள்தான் எனவும், அதற்கான பிறப்புச் சான்றிதழ்களையும் போலீஸாரிடம் காட்டியுள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த போலீஸார், அவர்களிடம் முத்துலெட்சுமி மற்றும் 3 குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு